இந்த ஆண்டுக்கான (2024) சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தனியார்துறை பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
பணவீக்கம் குறையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய காலாண்டுக் கருத்தாய்வில் அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தனர்.
கருத்தாய்வின் முடிவுகளை ஆணையம் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிட்டது.
அதில், இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் அது 2.4 விழுக்காடாக இருக்குமெனக் கூறப்பட்டிருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு நிதி, காப்பீடு, கட்டுமானம், மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகத் துறைகள் பங்களிக்கும் என்று கருத்தாய்வு கூறியது.
இருப்பினும், உற்பத்தித் துறையில் வளர்ச்சி குறையும் என்று வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர். முந்தைய கருத்தாய்வில் அத்துறையில் 1.6 விழுக்காட்டு வளர்ச்சி பதிவாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அண்மைய கருத்தாய்வில் அது 0.6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியும் நான்கு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நிதி, காப்பீட்டுத் துறைகள் 5.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என முன்னுரைக்கப்பட்டது. கட்டுமானத் துறையில் அது 3.9 விழுக்காடாகப் பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதக் கருத்தாய்வில் அவை முறையே 5.1 விழுக்காடாகவும் 3.8 விழுக்காடாகவும் இருக்குமெனக் கூறப்பட்டிருந்தன.
மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகத் துறைகள் 2.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என முன்னர் கூறப்பட்டது. அண்மைய கருத்தாய்வில் அது 3 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பொருளியல் 2.9 விழுக்காடு விரிவடைந்ததை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கும் என்ற முன்னுரைப்பு வெளிவந்துள்ளது.
சிங்கப்பூரின் இந்த ஆண்டுப் பொருளியல் வளர்ச்சி 2 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று கடந்த மாதம் வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்தது.
ஆணையத்தின் கருத்தாய்வில், அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதக் கருத்தாய்விலும் பொருளியல் வல்லுநர்கள் அதே வளர்ச்சி விகிதத்தை முன்னுரைத்திருந்தனர்.

