வர்த்தக விவகாரங்களைக் கையாளும் ஊடகமான தி எட்ஜ் (The Edge), உள்துறை அமைச்சர் கா. சண்முகத்திடமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கிடமும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 24) அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
புளூம்பர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை தி எட்ஜின் இணையத்தளத்திலும் வெளியானது. அதன் தொடர்பில் தி எட்ஜ், இரு அமைச்சர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
‘மேலும் ரகசியத்தில் மூழ்கியுள்ள சிங்கப்பூரின் மாளிகை பரிவர்த்தனைகள்’ (Singapore Mansion Deals Are Increasingly Shrouded in Secrecy) என்ற தலைப்பிலான கட்டுரைக்கு இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அக்கட்டுரையில், சிங்கப்பூரில் இடம்பெறும் உயர்தர பங்ளா (Good Class Bungalow) பரிவர்த்தனைகள் விமர்சிக்கப்பட்டன.
அதில் இடம்பெற்ற பல கருத்துகள் பொய்ச் செய்தி என்று அரசாங்கம் பின்னர் அடையாளம் கண்டது. திரு சண்முகம், டாக்டர் டான் இருவரின் பெயர்களும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டன.
அக்கட்டுரை, தங்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்ததாக திரு சண்முகமும் டாக்டர் டானும் இம்மாதம் 16ஆம் தேதியன்று கூறினர். அதற்கு நான்கு நாள்களுக்கு முன்னர் கட்டுரை அச்சிடப்பட்டது.
புளூம்பர்க், கட்டுரையை அச்சிட்ட மற்ற ஊடகங்கள் ஆகியவற்றுக்கு உத்தரவுக் கடிதங்களை (letters of demand) அனுப்பப்போவதாக அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர். கட்டுரையை முழுமையாக வெளியிட்ட தளங்கள், அதன் சில பகுதிகளை வெளியிட்டவை என இருவகை ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.
அதில் இடம்பெற்ற தகவல்கள் போலியானவை என்றும் அவை எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதக் குற்றச்சாட்டுகள் என்றும் தி எட்ஜ் ஒப்புக்கொண்டது. கட்டுரையும் ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற அது தொடர்பான பதிவுகளும் அமைச்சர்கள் இருவருக்கும் ஏற்படுத்திய மனவுளைச்சல், தலைகுனிவுக்கு தி எட்ஜ் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
“அந்தக் கட்டுரையையும் (ஃபேஸ்புக்) பதிவையும் அகற்றிவிட்டோம். இனி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தமாட்டோம், இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கொண்ட பதிவுகளையும் கட்டுரைகளையும் அச்சிடமாட்டோம் என உறுதியளிக்கிறோம்,” என்று தி எட்ஜ் குறிப்பிட்டது.