சிங்ஹெல்த் குழுமத்தில் இடம்பெறும் தாதியர், தங்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்ளவும் கூடுதல் நிதியுதவியாக 5.7 மில்லியன் வெள்ளியைப் பெறவுள்ளனர்.
வீ அறநிறுவனம் சிங்ஹெல்த் தாதியருக்கு அந்த நிதியுதவியை வழங்கவுள்ளது. முன்னதாக 2022ஆம் ஆண்டில் கல்விக்காகவும் நிபுணத்துவப் பயிற்சிகளைப் பெறவும் சிங்ஹெல்த் தாதியருக்கு வீ அறநிறுவனம் ஐந்து மில்லியன் வெள்ளி வழங்கியது. நிதியுதவி வழங்குவதற்காக அந்த அறநிறுவனம், தாதியர்க் கல்வி நிதி ஒன்றைத் தொடங்கியிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வீ அறநிறுவன இயக்குநர் வீ வெய் லிங், “சுயநலமற்ற அர்ப்பணிப்பை வழங்கும் தாதியர் நமது சுகாதாரப் பாராமரிப்புத் துறையின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். அவர்கள் இரவும் பகலும் தாங்களாகவே முன்வந்து நோய்வாய்ப்பட்டோரைக் கவனித்துக்கொள்கின்றனர். குறிப்பாக கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு இது பொருந்தும்.
“அவர்கள், தங்களின் கல்வியை மேம்படுத்திக்கொள்ள கல்வி உபகாரச் சம்பளம், புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள நிதியுதவி ஆகியவற்றை எங்களிடமிருந்துப் பெற எல்லா தகுதியும் உள்ளவர்கள் என்பது வீ அறநிறுவனத்தின் கருத்து,” என்று விவரித்தார்.
வங்கி அதிகாரியும் நன்கொடையாளருமான மறைந்த டாக்டர் வீ சோ யாவுடன் வீ அறநிறுவனம் தொடர்புடையது. அது, 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. முதலில் 30 மில்லியன் வெள்ளியுடன் வீ குடும்பம் அந்த அறநிறுவனத்தைத் தொடங்கியது.
வசதி குறைந்தோருக்குக் கல்வி, நலன் சார்ந்த உதவிகளை வீ அறநிறவனம் வழங்கிவருகிறது. அதோடு, வீ அறநிறுவனம் சீன மொழி மற்றும் சீனர் கலாசாரம், சமுதாய ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும் ஊக்குவித்துவருகிறது.
உயர் கல்வி, முதுநிலைப் பட்டக் கல்வி ஆகியவற்றின் மூலம் தாதியரின் ஆற்றலை மேம்படுத்த 2022ல் வீ அறநிறுவனத்தின் தாதியர்க் கல்வி நிதி தொடங்கப்பட்டது. மின்னிலக்கமயமாதல், செயற்கை நுண்ணறிவு, எந்திரவியல், உலக சுகாதாரம் போன்றவற்றில் தாதியர் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அந்த நிதி, தாதியருக்குக் கல்வி மானியங்களையும் வழங்கியது.
தாதியர்க் கல்வி நிதி தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு கல்வி வாய்ப்புகளின் மூலம் 970 சிங்ஹெல்த் தாதியருக்கு உதவி வழங்கப்பட்டிருக்கிறது.