தீவு விரைவுச்சாலையில் சனிக்கிழமை (மார்ச் 29) ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
நான்கு கார்களும் ஒரு டாக்சியும் மோதிக்கொண்டதாகக் காவல்துறை கூறியது.
துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் காலாங் பாரு வெளிவழிக்கு முன்னதாக நடந்த விபத்து குறித்துச் சனிக்கிழமைப் பிற்பகல் 3.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மோதலில் காயமடைந்தோரில், காரில் பயணம் செய்த 22 வயதுப் பெண், டாக்சி ஓட்டுநரான 70 வயது ஆண், டாக்சியில் பயணம் செய்த 52 வயது ஆடவர், 49 வயதுப் பெண், கார் ஓட்டுநரான 27 வயது ஆடவர் என ஐவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
மேலும் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்துவிட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காவல்துறை இவ்விபத்து குறித்து விசாரித்துவருகிறது.

