தென்கிழக்காசியாவின் பருவகால வறட்சி, ‘எல் நினோ’ தாக்கம், புவி வெப்பமாதல் ஆகியவற்றின் விளைவால் இவ்வாண்டு பல மாதங்கள் இந்தோனீசியாவில் காட்டுத்தீ பரவி அவ்வட்டாரம் முழுதும் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டது.
அந்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு தோட்டங்களுக்காகச் சதுப்புநிலக் காடுகள் எரிக்கப்பட்டதே அந்தப் புகைமூட்டத்திற்கு மூல காரணம் என ‘வேர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன்’ அமைப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அனைத்துலக வானிலை மாற்றத்திற்கான காரணங்களை ஆராயும் அறிவியலாளர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழையளவை ‘எல் நினோ’ பாதியாகக் குறைத்தாலும், பருவநிலை மாற்றம் அவ்வட்டாரத்தின் வெப்பநிலையை 1.6 டிகிரி செல்சியஸ் உயர்த்தி வறட்சியைத் தீவிரப்படுத்தியதாக அது குறிப்பிட்டது.
செப்டம்பரில் இந்தோனீசியாவின் 84 விழுக்காட்டுப் பகுதிகளில் இயல்பைவிடக் குறைவான மழையே பெய்ததாக ஆய்வில் பங்களித்த இந்தோனீசிய வானிலை ஆய்வாளரான பிரமுதியன் ஃபிர்தாவ்ஸ் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.9 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பை இந்தோனீசியக் காட்டுத்தீ எரித்துச் சாம்பலாக்கியது. இது லண்டன் நகரைவிட ஏறத்தாழ 18 மடங்கு பெரியது. அந்நாட்டில் 400,000க்கும் மேற்பட்டோருக்குச் சுவாசத் தொற்று ஏற்பட்டது.
மலேசியாவில் பள்ளிகள் மூடப்பட்டன; விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்குப் புகைமூட்டம் தொடர்பான பாதிப்புகளுடன் வருவோரின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்தது.
நவம்பர் 12ஆம் தேதி கலிமந்தானின் கிழக்குப் பகுதிகளில் காட்டுத்தீ மூண்ட சில இடங்களிலிருந்து மிதமான புகை வெளியேறியது ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு நிலையத்தின் இணையத்தளத்தில் பதிவான தகவல்கள் மூலம் தெரியவந்தது.
இதற்கிடையே, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்தோனீசியாவின் 23 மாவட்டங்களில் புகைமூட்டம் தொடங்கிய 17,800க்கும் மேற்பட்ட இடங்கள் செயற்கைக்கோள் படங்கள்வழி கண்டறியப்பட்டதாக ‘கிரீன்பீஸ்’ அறிக்கை கூறுகிறது.
அவற்றுள் 2,270 இடங்கள் செம்பனைத் தோட்ட உரிமப் பகுதிகளிலும் 2,938 இடங்கள் மரக்கூழ் உரிமப் பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.
எல் நினோ நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதால் எதிர்காலத்தில் காட்டுத்தீ போன்ற பேரிடர்களைத் தடுக்கச் சதுப்புநிலப்பகுதிகளை மீட்டெடுக்கவும் நீர்மட்டத்தைப் பேணவும் காடுகள் அழிக்கப்படுவதைக் குறைக்கவும் வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.
மேலும், சட்டவிரோதமாகக் காடுகளை எரிப்பதைத் தவிர்க்கும் நில மேலாண்மை முறைகளை அரசாங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
