தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சைனாடவுனில் அனுதினமும் அணிதிரளும் மூத்தோர்

சத்தமாகப் பாட்டு பாடி வர்த்தகங்களுக்கு இடைஞ்சல்

2 mins read
0eb5fa41-7923-4a0a-a9e4-b615dbe28a8d
சைனாடவுன் பகோடா ஸ்திரீட்டில் ஆடல், பாடல் என இசையில் மூழ்கிவிடும் பத்துக்கும் மேற்பட்டவர்களால் அவ்வட்டாரத்தில் உள்ள வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

ஒலிபெருக்கிகள், தாளவாத்தியங்கள் என ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட மூத்தோர் தினமும் மாலையில் ஒன்றுகூடுகிறார்கள்.

சைனாடவுன் பகோடா ஸ்திரீட்டில் அனுதினமும் அணிதிரளும் இக்குழுவினர், பிறகு ஆடல், பாடல் என இசையில் மூழ்கிவிடுகின்றனர். எனினும், இவர்களின் இந்த நடவடிக்கையால்  அவ்வட்டாரத்தில் உள்ள வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள உணவகங்களில் உள்ள ஏராளமான ஊழியர்கள் இந்தக் குழுவினர் ஏற்படுத்தும் இரைச்சலால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷின்மின் செய்தித்தாளிடம் ஆகஸ்ட் 21ஆம் தேதி கூறியதாக மதர்ஷிப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இசையின் ஓசை காரணமாக உணவகங்களுக்கு வருகையளித்த சிலர், தங்கள் உணவை அருந்தாமல் பாதியிலேயே சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அங்குள்ள ‘சிச்சுவான்’ உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அந்தக் குழு இதற்கு முன்பு வாரயிறுதி நாள்களிலும் திங்கட்கிழமைகளிலும் மட்டுமே கூடியதாகவும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக அந்த நிலை மாறி, அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வோர் இரவும் வந்துவிடுவதாகவும் கூறினார்.

“வழக்கமாக அவர்கள் மாலை 6 மணிக்கு வரத் தொடங்குவார்கள். சொந்த ஒலிபெருக்கியை கொண்டு வருவார்கள். அதுமட்டுமன்று, பல இசைக்கருவிகளையும் கொண்டு வருகிறார்கள், மேலும், புரோஜெக்டர்கள் உள்ளிட்ட பெரிய திரைகளையும் கூட அங்கு வைப்பார்கள். உச்சக் குரலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பாடுவார்கள். இந்தக் கூத்து இரவு 10 மணி வரையும் நீடிக்கும்,” என்று அந்த ஊழியர் கூறினார்.

உணவகம் அருகில் இருப்பதாலும், ஒலி தடுப்பு கட்டமைப்பு ஏதுமில்லாததாலும் வாடிக்கையாளர்கள் விரைவாகவே வெளியேறி விடுகிறார்கள் என்று சொன்ன அவர், இதனால் வர்த்தகத்தில் 10 முதல் 15 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே, அங்கிருக்கும் மற்றோர் உணவகமான ஓரியண்டல் சீன உணவகத்தின் ஊழியரும் இதே கவலையைப் பகிர்ந்தார்.

அப்பகுதியில் இதனால் ஏற்படும் சத்தத்தை ஈடுசெய்ய அவர் தனது குரலை உயர்த்திப் பேசினாலும், வாடிக்கையாளர்களால் தம் குரலைத் தெளிவாகக் கேட்க இயலவில்லை என்று அவர் சொன்னார்.

மூத்தோர் பாடி நடனமாடும்போது, ​​நடைபாதை மக்களால் நிரம்பிவிடும் என்று குறிப்பிட்ட அவர், அப்போது ஒருவேளை தள்ளுமுள்ளு ஏற்பட்டால் அது ஆபத்தாகிவிடும் என்றும் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பில் வெவ்வேறு வர்த்தக உரிமையாளர்கள் காவல்துறையை அழைத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது ​​அக்குழுவினர் சனி, திங்கட்கிழமைகளில் மட்டுமே வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஷின்மின் நாளிதழிடம் பேசிய சம்பந்தப்பட்ட மூத்தோர் குழு, தாங்கள் சத்தம் எழுப்பவில்லை என்றும் தங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியது. 

குறிப்புச் சொற்கள்