அண்டை வீட்டில் இருந்தவரைக் கத்தியால் தாக்கியவருக்குச் சிறை

2 mins read
c9f4f3d5-c687-4dbc-91a8-510895f51250
சம்பவம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் உள்ள வீவக புளோக்கில் நிகழ்ந்தது. - படம்: ‌ஷின் மின்

மின்தூக்கி எடுக்கும் பகுதியில் முதியவர்கள் இருவருக்கு இடையே மூண்ட சண்டை கத்திக்குத்து தாக்குதலாக மாறியது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் காயங்களுக்கு ஆளானார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நடந்த இந்தக் கத்திக்குத்துக்கு ஆளான 69 வயது சுவா கின் தோங் அதற்கு இரண்டு மணிநேரம் கழித்து இதய நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார்.

அவரைத் தாக்கிய 72 வயது லிம் டீ டீ எனும் ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறரைத் தாக்கியதாக தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நிகழ்ந்தபோது லிம்மும் திரு சுவாவும் கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் எட்டாம் தளத்தில் வசித்தனர். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி காலை 11.39 மணிக்கு சற்று முன்பு லிம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

எட்டாவது தளத்தில் அவர் மின்தூக்கியிலிருந்து வெளியே வரும்போது திரு சுவாவுடன் மோத நேரிட்டது. திரு சுவா மின்தூக்கிக்குள் நுழைய முயன்றார்.

அதனால் இருவரும் கோபமடைந்தனர். லிம் பிறகு வீடு திரும்பினார்.

பின்னர் திரு சுவா, மற்றோர் அண்டை வீட்டாரான திரு ஹுசைன் முகம்மது, 66, என்பவரைத் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். காரணம் தெரியாவிட்டாலும் திரு ஹுசைன் ஒப்புக்கொண்டார்.

திரு சுவா மற்றும் திரு ஹுசைன், லிம் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் மூண்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

லிம் தனது வீட்டின் சமையலறைக்கு ஓடிச் சென்று ஒட்டுமொத்தமாக 50 சென்டிமீட்டர் நீளமும் கத்திப் பாகம் 37 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட ஒரு கத்தியை எடுத்துவந்தார். காலை 11.30 மணியளவில் லிம், திரு சுவாவைப் பலமுறை கத்தியால் தாக்கினார்.

லிம்மின் தலையிலும் கை, கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. இதைக் கண்டதும் திரு ஹுசைன், லிம்மைப் பிடித்து சண்டையை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், லிம் தொடர்ந்து கத்தியால் தாக்க முயன்றார். திரு ஹுசைனின் இடது கையில் காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தைவிட்டுச் சென்ற திரு சுவா, முதல் தளத்துக்கு மின்தூக்கியில் சென்றார். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் அவர் நடந்ததைச் சொன்னார். பின்னர் மயங்கி விழுந்தார்.

திரு சுவா, திரு ஹுசைன் இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பிற்பகல் 1.20 மணிக்கு திரு சுவா உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்