அரசாங்க அதிகாரிகளைப்போல் நடித்து மோசடி: மில்லியன்கணக்கில் பறிகொடுத்த முதியோர்

1 mins read
98d5d812-0329-4d06-a1f0-af933e99b23d
கோப்புப் படம்: - சாவ்பாவ்

முதியோர் இருவர் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்க அதிகாரிகளைப்போல் நடித்த மோசடிக்காரர்களிடம் மொத்தம் 5.9 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர்.

ஒருவர் ஒரு மில்லியன் வெள்ளியையும் மற்றொருவர் 4.9 மில்லியன் வெள்ளியையும் பறிகொடுத்தார். வெளிநாட்டு சட்ட ஒழுங்கு அதிகாரிகளாக நடித்து மோசடிக்காரர்கள் அந்த முதியோரிடமிருந்து பணம் பறித்தனர்.

ஸ்டார்ஹப், சிங்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வேலை செய்வதாகப் பொய் சொல்லி ஒருவர் அவ்விருவரையும் தொடர்புகொண்டார். இருவரின் கைப்பேசி எண்களும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அந்த ‘அதிகாரி’ அவர்களை வேறொரு மோசடிக்காரரிடம் மாற்றிவிட்டார்.

அந்த மோசடிக்காரர், வெளிநாட்டில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதியவர்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது.

வெளிநாட்டுக் காவல்துறையினருக்கு சிங்கப்பூரில் விசாரணை நடத்தவோ அவர்களின் விசாரணையில் சிங்கப்பூரில் உள்ள ஒருவரை ஒத்துழைக்குமாறு உத்தரவிடவோ அதிகாரம் கிடையாது என்று சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு முற்பாதியில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் பதிவானது. அந்தக் காலகட்டத்தில் தெரியப்படுத்தப்பட்ட 26,587 மோசடிச் சம்பவங்களில் 385.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை பறிபோனது.

2024 பிற்பாதிக்கான புள்ளி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்