லாவோசிலிருந்து மின்சார இறக்குமதி: சிங்கப்பூரின் புதிய திட்டம்

லாவோசிலிருந்து மின்சார இறக்குமதி: சிங்கப்பூரின் புதிய திட்டம்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: துவாஸ் பவர்

30 Oct 2026 - 6:39 pm

2 mins read

லாவோசிலிருந்து 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இறக்குமதி செய்ய முன்மொழியப்பட்டுள்ள திட்டம் நிறைவேறினால், சிங்கப்பூரின் எரிசக்திப் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்.

இது சிங்கப்பூரின் தற்போதைய 12 கிகாவாட் மின் உற்பத்தித் திறனில் நான்கு விழுக்காட்டிற்கும் சற்றுக் கூடுதலாகும். இந்த மின்சாரம் முக்கியமாக லாவோசின் நீர்மின் நிலையங்களிலிருந்து பெறப்படும்.

வறட்சிக் காலத்தில் நீர்மின்சாரம் குறைய வாய்ப்புள்ளதால், சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் வழியாகவும் மின்சார இறக்குமதி ஈடுசெய்யப்படலாம் என்று துவாஸ் பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மைக்கல் வோங் தெரிவித்தார்.

துவாஸ் பவர், எலெக்ட்ரிசிட்டே டு லாவோஸ், போங்சுப்தாவி குழுமம் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரையிலான நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. மெரினா பே சேண்ட்சில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியின்போது இந்த உடன்பாடு கையெழுத்தானது.

சிங்கப்பூரில் மின்சார இறக்குமதி உரிமம் பெற நிறுவனங்கள் மூன்று கட்டங்களைக் கடக்க வேண்டும். திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் தற்காலிக ஒப்புதலை எரிசக்திச் சந்தை ஆணையத்திடம் முதலில் பெற வேண்டும். இரு நாட்டுத் தேவைகளையும் பூர்த்திசெய்தால் தற்காலிக உரிமமும், இறுதியில் முழுமையான இறக்குமதியாளர் உரிமமும் வழங்கப்படும்.

முதலாண்டில் 100 மெகாவாட் மின்சாரம் இறக்குமதி செய்யப்படும். பின்னர் படிப்படியாக 500 மெகாவாட்டாக அது உயர்த்தப்படும். தேவைக்கு ஏற்பப் புதிய கம்பிவடங்கள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு விரிவாக்கமும் மேற்கொள்ளப்படும்.

2027ஆம் ஆண்டிற்குள் அதிகாரத்துவ ஒப்புதல்களையும் வாடிக்கையாளர்களையும் பெற நிறுவனங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. எல்லை தாண்டிய மின்சாரப் பரிமாற்றத்திற்கான இருதரப்பு ஒப்பந்தங்களைப் பெறுவதே தற்போதைய முக்கியச் சவாலாகக் கருதப்படுகிறது.

மின்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் தற்போதைய திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 200 மெகாவாட் அளவைவிட இது இருமடங்கிற்கும் அதிகமாகும். பல நாடுகளிலிருந்து குறைந்த கரிம மின்சாரத்தை இறக்குமதி செய்ய 13 திட்டங்களுக்குச் சிங்கப்பூர் தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. ஆசியான் மின்கட்டமைப்பை நோக்கிய முக்கிய நகர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்