சிங்கப்பூருக்கு 1.3 கிகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்ய செம்ப்கார்ப் யுடிலிடிஸ் நிறுவனத்துக்கு எரிசக்திச் சந்தை ஆணையம் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
வட்டார, உள்நாட்டு வளங்களிலிருந்து குறைவான கரிம வெளியேற்றத்தைக் கொண்ட மின்சாரத்தைத் தேடி ஒருங்கிணைக்க செம்ப்கார்ப் நிறுவனம், ‘மை எனெர்ஜி கன்சார்டியம்’, ‘பெட்ரோனாஸ்’, ‘தெனாகா நேஷனல் பர்ஹாட்’, ‘பெட்ரோவியட்னாம் டெக்னிக்கல் செர்வீசஸ்’ ஆகிய கூட்டமைப்புப் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
வியட்னாமின் கடல் காற்றாலையும் மலேசியாவின் சூரிய சக்தியும் அதில் அடங்கும்.
கடந்த ஆண்டு மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலைச் சந்திப்பிற்கு இடையே செம்ப்கார்ப் யுடிலிடிஸ், மை எனெர்ஜி கன்சார்டியம், பெட்ரோவியட்னாம் டெக்னிக்கல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டு மேம்பாட்டு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன.
அந்தத் திட்டத்திலிருந்து 2035ஆம் ஆண்டுக்குள் மின்சாரத்தை இறக்குமதி செய்வதை நோக்கி செம்ப்கார்ப் நிறுவனம் செயல்படுகின்றன.
“அடுத்த சில ஆண்டுகளில் செம்ப்கார்ப் கூட்டமைப்பு திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்தும். சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து ஒப்புதல்களைப் பெறுவது, வாங்குவோருடன் எரிசக்திக் கொள்முதல் ஒப்பந்தங்களை நிறைவுசெய்வது, போதுமான நிதியை உறுதிப்படுத்துவது ஆகியவை அவற்றுள் அடங்கும்,” என்று எரிசக்திச் சந்தை ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 26 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குறிப்பிட்ட இந்தத் திட்டத்தைத் தவிர, ஆஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களுக்கு ஆணையம் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல்களையும் உரிமங்களையும் வழங்கியது.
குறைந்த கரிம வெளியேற்ற மின்சாரத்தை இறக்குமதி செய்வது எரிசக்தித் துறையைக் கரிமம் அற்ற துறையாக மாற்றுவதற்கான சிங்கப்பூரின் உத்திகளில் ஒரு பகுதி என்று ஆணையம் குறிப்பிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜோகூரிலிருந்து 900 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை ஆணையம் வழங்கியது.
