செங்காங் பொது மருத்துவமனையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் தங்களது அறுவை சிகிச்சை அரங்குகளில் அறிமுகப்படுத்திய மின்சேமிப்புப் புதுமைகளின் மூலம், ஆண்டுதோறும் தங்களின் மின்சாரக் கட்டணத்தில் $1.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சேமித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிலைத்தன்மை குறித்த கருத்தரங்குடன் இணைந்த நடத்தப்பட்ட போட்டியில் இரு புதுமைத் திட்டங்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை நட்சத்திர விருது வழங்கப்பட்டது.
குறைந்த கரிம வெளியேற்ற சுகாதாரப் பராமரிப்பு என்ற கருப்பொருளில் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரின் மூன்று பொது சுகாதாரக் குழுமங்கள் 150 திட்டங்களைச் சமர்ப்பித்தன.
சுற்றுச்சூழல் மீதான தாக்கம், பிற மருத்துவ அமைப்புகளிலும் புதுமை நடைமுறைகளைச் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பிடப்பட்டன.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அறுவை சிகிச்சை அரங்குகள் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் பகுதிகளாகும்.
காற்றோட்டம், குளிரூட்டல் தேவைகள் காரணமாக, வழக்கமான மருத்துவமனை வார்டுகளைவிட இவை ஆறு மடங்குவரை அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.
தொற்றுக்கட்டுப்பாட்டு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றிய செங்காங் பொது மருத்துவமனைக் குழு, 2025ஆம் ஆண்டு மருத்துவமனையின் 28 அறுவை சிகிச்சை அறைகளில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மறுசுழற்சி குளிரூட்டும் அமைப்பை அறிமுகப்படுத்தியது.
அறைக்கு வெளியே இருந்து காற்றை எடுக்கும் வழக்கமான குளிரூட்டிகளைப் போலன்றி, மறுசுழற்சிக் குளிரூட்டும் அமைப்பானது ஏற்கெனவே அறைக்குள் இருக்கும் காற்றையே வடிகட்டிக் குளிர்விக்கிறது. இதனால் குறைந்த அளவிலான மின்சாரமே தேவைப்படுகிறது.
நோயாளிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யாமல், செங்காங் பொது மருத்துவமனையின் இந்த மேம்பாடு ஆண்டுதோறும் 3.38 ஜிகாவாட்-மணிநேர மின் நுகர்வைக் குறைத்துள்ளது.
இது 12,000 நான்கு அறை கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மாதாந்திர மின் பயன்பாட்டிற்கு இணையானது ஆகும். இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தில் $818,000 மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
