முன்பு கால்களாலும் பின்னர் வாகனங்கள் மூலமும் போரிட்ட காலாட்படைக்கு, தற்காலப் போர்க்களம் முற்றிலும் புதிய சவால்களை முன்வைக்கிறது.
பெருஞ்சுவர்களைக் கொண்ட கட்டடங்களில் மறைந்திருந்து தாக்கும் ‘கொரில்லா’ உத்திகள் (Guerrilla tactics) பயன்படுத்தப்படும் போர்ச்சூழலை எதிர்கொள்ள, சிங்கப்பூர் ராணுவம் தனது காலாட்படையை ‘அடுத்த தலைமுறைக் காலாட்படைப் பட்டாளம்’ (Next-Generation Infantry Battalion - NGIB) என்ற புதிய கட்டமைப்பாக மாற்றியமைத்துள்ளது.
இனிவரும் காலங்களில் இப்புதிய முறைப்படி இயங்கவுள்ள இந்தப் பட்டாளம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘வாலபி 2026’ (Exercise Wallaby 2026) பயிற்சியில் இக்கட்டமைப்பின்கீழ் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும், முன்கள வீரர்களே ஆயுதப் படையின் நிரந்தர பலம் என்று தலைமைக் காலாட்படை அதிகாரியும் 9வது படைப்பிரிவின் தளபதியுமான பிரிகேடியர் ஜெனரல் ஃபைரோஸ் ஹசன் தெரிவித்தார்.
இந்த இலக்கை எட்ட, அடுத்த தலைமுறைக் காலாட்படைப் பட்டாளம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
திறன்மிகு போர்முறை (Fight Smarter)
முன்பு போலன்றி, இப்போது மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து போரிடும் (Manned-Unmanned Teaming) புதிய முறை அறிமுகமாகியுள்ளது.
இதற்காக ஒவ்வொரு படைப்பிரிவிலும் கண்காணிப்பு, தாக்குதல் ஆகியவற்றுக்கான ஆளில்லா வானூர்தி உள்ளிட்ட பல்வேறு ஆளில்லா அமைப்புகளை (Unmanned Systems) இயக்க, ‘ஸ்டீல் நெட்’ (Steel Net) என்ற இரண்டு சிறப்புப் பிரிவுகள் செயல்படுகின்றன.
மேலும், ஒவ்வொரு துப்பாக்கிப் படைப் பிரிவும் மேலும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்யும் நீக்குப்போக்கினைக் கொண்டுள்ளன.
“எந்த ஓர் ஆபத்தான இடத்திற்கும் மனிதர்களுக்கு முன்பாக முதலில் இயந்திரங்களையே அனுப்புகிறோம்,” என்று பிரிகேடியர் ஜெனரல் ஃபைரோஸ் ஹசன் விளக்கினார்.
“ஒவ்வொரு மாற்றமும் போரில் வெற்றிபெறுவதற்கு மட்டுமன்றி, முன்கள வீரர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் மிக முக்கியமானது. ஆளில்லா அமைப்புகளைப் பயன்படுத்துவதால் வீரர்கள் பாதுகாப்பான தொலைவில் இருந்தே எதிரிகளைக் கண்காணிக்கவும் தாக்கவும் முடிகிறது.
“எங்கள் பிரிவில் உள்ள புதிய ‘ஆர்தோஸ்’ (Artos) ஆளில்லா வானூர்திகள் உளவு பார்க்கவும் தாக்கவும் வல்லவை,” என்று ஐந்தாவது சிங்கப்பூர் காலாட்படைப் பிரிவின் (5 SIR) ஸ்டீல் நெட் தளபதியான 20 வயது மூன்றாம் சார்ஜன்ட் ஸ்காட் மைக்கேல் தாமஸ் தெரிவித்தார்.
“கட்டடங்களுக்குள் நேரில் சென்று தேடுவதற்குப் பதிலாக, எதிரிகள் எங்களைப் பார்ப்பதற்கு முன்பே ஆளில்லா வானூர்திகள் மூலம் அவர்களைக் கண்டறிந்து விடுகிறோம். இதனால் வீரர்களுக்கு ஆபத்தில்லாமல் தாக்குதலைத் திட்டமிட முடிகிறது,” என்றார் அவர்.
மேம்பட்ட ஒருங்கிணைப்பு
முன்பு காலாட்படை வீரர்கள் தரையில் தனித்து நின்று போராட வேண்டியிருந்தது. ‘வாக்கி டாக்கி’ வழி மற்ற படைகளிடம் உதவி கேட்க முடிந்தது.
ஆனால் இப்போது ‘பிஎம்எஸ்’ எனப்படும் மேம்பட்ட போர் நிர்வாக அமைப்பின்வழி தரைப்படை, கவச வாகனங்கள், ஆகாயப்படை ஆகியவற்றின் நிலவரம் ஒரே மின்திரையில் காண்பிக்கப்படுகின்றன.
“ஆபத்தான பணிகளுக்கு வீரர்களை நேரடியாக அனுப்புவதற்குப் பதிலாக, இயந்திரங்களை முதலில் களமிறக்குகிறோம்,” என்று 5 SIR தளபதியான 37 வயது லெப்டினென்ட் கர்னல் ஷாரீல் ராஜரத்தினம் தெரிவித்தார்.
“ஆளில்லா வானூர்திகளின்வழி பதிவாகும் காணொளிகள் நேரடியாகத் திரைக்கு வருவதால், முன்களத்தில் உள்ள வீரர் காண்பதை நானும் என் திரையிலேயே பார்க்க முடிகிறது. தகவல்களுக்காகக் காத்திருக்காமல் விரல் நுனியில் உடனுக்குடன் முடிவெடுக்க இது உதவுகிறது,” என்றார் அவர்.
எதிர்காலத் தயார்நிலை (Future Ready)
மனித ஆற்றலையும் தானியங்கி இயந்திரங்களையும் ஒன்றிணைப்பதன் வழி, முன்கள வீரர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிசெய்வதோடு போர்க்களச் செயல்பாடுகளையும் சிங்கப்பூர் ராணுவம் பலமடங்கு வேகப்படுத்துகிறது.
பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து சந்தையில் உள்ள அதிநவீன ஆளில்லா வானூர்திகள், ‘யுஜிவி’ ஆளில்லாத் தரை வாகனங்கள், ஆளில்லா எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து இந்தக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு வருவதாக நில அமைப்புகள் பிரிவு இயக்குநரான 47 வயது டொமினிக் லி டே லுன் கூறினார்.
“உளவுக்கான ஆளில்லா வானூர்திகளும் போர் மேலாண்மை அமைப்பும் இத்தகைய நேரடிச் சோதனைகள் மூலமே முழுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பொதுச் சந்தைத் தொழில்நுட்பங்களை ராணுவத் தேவைக்கு ஏற்ப மாற்றி, களத்தில் சோதிப்பதே எங்கள் பணி,” என்று அவர் கூறினார்.
