ஒருவர் மனநல அல்லது உணர்வு ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு குடும்ப வன்முறைக்கு ஆளானதை நிரூபிக்க, குடும்பத்தில் அன்றாடம் ஏற்படும் சண்டைகளால் கோபம், மகிழ்ச்சியின்மையையும் தாண்டி வெளிப்படையாகத் தென்படும் அபாயங்களுக்கு ஆளானதை நிரூபிக்கவேண்டும் என்று சிங்கப்பூர் நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன.
கடந்த வாரம் விதிக்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளில் இது வலியுறுத்தப்பட்டது.
எது உணர்வு அல்லது மனநல ரீதியான துன்புறுத்தலைக் குறிக்கும் என்பதை அந்தத் தீர்ப்புகள் எடுத்துக்காட்டியுள்ளன. 2025ஆம் ஆண்டு மாதர் சாசனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி மனநல, உணர்வு ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களும் குடும்ப வன்முறைச் சம்பவங்களாக வகைப்படுத்தப்படலாம்.
முதல் வழக்கில் இம்மாதம் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. தனது 15 வயது மகளின் சார்பில் மாமனாருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு மாது ஒருவரின் விண்ணப்பத்தை நீதிபதி கோ கியெட் யி நிராகரித்தார்.
தனிநபர் பாதுகாப்பு ஆணை என்பது ஒருவர் குடும்ப வன்முறையில் ஈடுபடாமல் கட்டுப்படுத்தும் உத்தரவாகும்.
தனது 80 வயது மாமனார் படிக்கும் மேசையை சுத்தம் செய்யாததற்கு 15 வயது மகளைத் திட்டியது, பெண்ணின் தோழிக்கு முன்னால் அவரை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சொன்னது போன்ற குற்றச்சாட்டுகளை மாது முன்வைத்தார்.
இதன் தொடர்பில் பேசிய நீதிபதி கோ, குடும்ப வன்முறை என்று வகைப்படுத்தப்படும் செயல்கள் உண்மையிலேயே மோசமாக இருக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மற்றொரு வழக்கில் மாது ஒருவர் தனக்காகவும் 11 வயதாகும் தனது ஆக இளம் பிள்ளைக்காகவும் கணவருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கும் வீட்டிலிருந்து ஒதுக்கிவைக்கும் ஆணைக்கும் (டிஇஓ) விண்ணப்பித்திருந்தார். வீட்டிலிருந்து ஒதுக்கிவைக்கும் ஆணை, துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளோ வீட்டின் சில பகுதிகளுக்குள்ளோ அனுமதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
மணமுடித்து 28 ஆண்டுகள் ஆகிவிட்ட அந்தத் தம்பதியர் விவாகரத்து செய்யவிருக்கின்றனர்.
கணவர் பல்வேறு வழிகளில் தன்னைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்த மாது குற்றஞ்சாட்டினார். தனது தொலைபேசி அழைப்புகளைக் கண்காணிப்பது, கத்தியைக் கொண்டு தன்னை மிரட்டியது, தன்னைப் பற்றிப் பொய்த் தகவல் பரப்பியது போன்ற நடவடிக்கைகளில் கணவர் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.
தனது விண்ணப்பங்களில் அந்த மாது போதுமான தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி இம்மாதம் 16ஆம் தேதி நீதிபதி சுவா வெய் யுவென் விண்ணப்பங்களை நிராகரித்தார்.

