ஜூரோங் வெஸ்ட் கட்டுமானத் தளம் ஒன்றில் ஊழியர் ஒருவர் ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமுற்றார்.
சம்பவம் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலையில் நடந்ததாகவும் இதுகுறித்து தங்களுக்கு அதிகாலை 3.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 75ல் உள்ள புளோக் 737 அருகே இருக்கும் கட்டுமானத் தளத்தில் இச்சம்பவம் நடந்ததாக அறியப்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாடி உயரத்திற்குச் சமம் என்று கூறப்படும் சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து ஊழியர் விழுந்தார் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊழியர் அச்சமயத்தில் ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகளின் ஓர் அங்கமாக உலோகத் தளமேடை ஒன்றுக்கான வேலையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஊழியர் உடனே தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயல்முறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு மேலும் வலுவாக்கப்பட, கட்டுமானத் தளத்தில் அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது நடந்துவரும் விசாரணையில் மனிதவள அமைச்சுக்கு உதவி வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
வேலையிடப் பாதுகாப்பு தொடர்பில் மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி 2023ஆம் ஆண்டில் நேர்ந்த வேலையிட விபத்துகளுக்கு உயரத்திலிருந்து கீழே விழுவதும் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தது. அந்த ஆண்டில் உயரத்திலிருந்து கீழே விழுந்து மாண்ட ஊழியர்களின் எண்ணிக்கை எட்டு. 67 ஊழியர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்

