சம்பள நிலுவைத் தொகையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் 20 பேருக்கு மாற்று வேலை

நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காத முதலாளி சிங்கப்பூர் திரும்பியுள்ளார்

சம்பள நிலுவைத் தொகையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் 20 பேருக்கு மாற்று வேலை

3 mins read
60d10162-22fb-43ff-89cd-c37c47137219
மனிதவள துணையமைச்சர் திரு தினே‌‌ஷ் வாசு தாஸ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு விநியோகித்தார். - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2

சம்பள நிலுவைத் தொகை பிரச்சினையால் அவதியுற்ற 407 வெளிநாட்டு ஊழியர்களில் 20 பேருக்கு மாற்று வேலை கிடைத்துள்ளது.

வேலைக்கான நேர்முகத் தேர்வுகள் மற்ற ஊழியர்களுக்கு நடைபெற்று வருவதாகவும் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மனிதவள துணையமைச்சர் தினே‌‌ஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.

கிராஞ்சி பொழு‌துபோக்கு நிலையத்தில் ஊழியர்களை ஞாயிற்றுகிழமை (ஜூன் 28) சந்தித்துப் பேசியபோது, அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு பகிர்ந்தார்.

தற்போது அந்த ஊழியர்கள் துவாஸ் வியூ விடுதியில் தங்கியுள்ளனர்.

அவர்களில் 230 பேர் செங்காங்கில் அமைந்திருக்கும் ஓன்போர்டிங் நிலையத்திற்கு மாற்றப்படுவர்.

அங்கு, உண்ண உணவு, தங்குவதற்கான வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு தினே‌‌ஷ் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஊழியர்களுக்குச் சம்பள பாக்கி வைத்த முதலாளி சிங்கப்பூர் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கேபிஏ எஞ்சினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ், விவிஆர் பிளான்ட் எஞ்சினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலாளியான திரு ராமு பழனி வேலு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவரது கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடத்திவரும் விசாரணைக்கு அவர் தற்போது ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வேலை நியமனச் சட்டத்தையோ வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தையோ முதலாளிகள் மீறினால், மனிதவள அமைச்சு அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என திரு தினேஷ் எச்சரித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள நிலுவைத் தொகையை மீட்டெடுக்க சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியின் உதவியை நாடும்படி அவர் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட 407 ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்திற்கும் சிங்கப்பூர் ஒப்பந்ததாரர் சங்கத்திற்கும் தமது நன்றியைத் திரு தினே‌‌ஷ் தெரிவித்தார்.

இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் சிங்கப்பூரின் சில கோயில்களும் முன்வந்து, ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கியதையும் அவர் சுட்டினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் கிட்டத்தட்ட 280 பேர் ஞாயிற்றுக்கிழமை கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுடன் பேசிய மனிதவள துணையமைச்சர் திரு தினே‌‌ஷ் வாசு தாஸ்.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுடன் பேசிய மனிதவள துணையமைச்சர் திரு தினே‌‌ஷ் வாசு தாஸ். - படம்: பே. கார்த்திகேயன்

அப்போது, அவர்களுக்குப் பொட்டலமிடப்பட்ட உணவை விநியோகித்த திரு தினேஷ், அவர்களில் சிலருடன் கலந்துரையாடினார்.

திரு அருள்ராஜ் எடிசன்ராஜ், 35, பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர்.

கடந்த ஈராண்டுகளாக கேஏபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அவர், சம்பள நிலுவைத் தொகை பற்றி மனிதவள அமைச்சிடம் புகார் அளித்தவர்களில் ஒருவர்.

“கடந்த இரண்டு மாதங்களாக எனக்குச் சம்பளம் கிடைக்கவில்லை,” என்றார் அவர்.

ஒன்றிலிருந்து எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், தமிழகத்தில் தமது குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க உற்றார் உறவினரது உதவியை நாடி வருவதாகத் தமிழ் முரசிடம் பகிர்ந்தார்.

“எனது இரண்டாவது குழந்தை விபத்தில் சிக்கிக்கொண்டாள். நான் இந்தியாவிற்குச் சென்று அவளைப் பார்த்துகொள்ள விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்வதாக மனிதவள அமைச்சு எனக்கு ஆதரவளித்தது. பிரச்சினைகளைக் கேட்டு அதிகாரிகள் தீர்வுகாண்பது மனநிறைவு அளிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பள நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரி, ஜூன் 22ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் திரண்டனர்.

கேஏபி எஞ்சினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ், விவிஆர் பிளான்ட் எஞ்சினியரிங் ஆகிய நிறுவனங்கள் குறைந்தது இரண்டு மாதச் சம்பளத்தைத் தங்களுக்குத் தரவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்