தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தொழில்: தென்மேற்கு வட்டாரவாசிகளுக்குக் கூடுதல் உதவி

2 mins read
91cbd200-6ee7-4940-82b2-dc32d8dd703c
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்திற்கும் 14 பயிற்றுவிப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான புதிய பங்காளித்துவத்தின்கீழ் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தொழில் ஆலோசனை சார்ந்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தென்மேற்கு வட்டாரவாசிகள் வேலை தேடவோ அல்லது வருங்காலத்திற்குத் தேவையான திறன் மேம்பாடுகளைப் பெறவோ விரும்புவோர், பல்வேறு பயிலரங்குகள், தொழில்துறை உரைகள், ஆலோசனைகள் எனப் பலவற்றை நாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வாழ்நாள் கற்றல் சிங்கப்பூர் அமைப்பைச் சேர்ந்த திறன்கள் மற்றும் பயிற்சிக்கான தூதர்களிடம் அவர்கள் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறலாம். 

ஆள்சேர்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்த வாழ்க்கைத் தொழில் பயிற்றுநர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெறலாம். 

தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்திற்கும் 14 பயிற்றுவிப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான புதிய பங்காளித்துவத்தின்கீழ் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு இதற்கு ஆதரவு நல்குகிறது. 3,000 வட்டாரவாசிகளைச் சென்று சேர்வது ஏற்பாட்டாளர்களின் நோக்கம்.

பங்களிக்கும் நிறுவனங்களில் ஒன்றான இமார்சிட்டி (Emarsity), செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி காணொளிகளை எப்படி உருவாக்குவது உள்ளிட்டவற்றைப் பற்றிய வகுப்புகளை நடத்துகிறது.

தையல் வகுப்புகளை வழங்கும் டெம்புசு நிலையம் (Tembusu Institute), முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்புத் திறன்களைக் கற்றுத்தரும் எக்ஸ்பிரெய்ன்ஸ் நிலையம் ஆகியவை இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.

ஜூரோங், புக்கிட் பாத்தோக், சுவா சூ காங் ஆகிய வட்டாரங்கள் தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தில் அடங்கியுள்ளன. மத்திய வட்டாரம், வடமேற்கு வட்டாரம், வடகிழக்கு வட்டாரம், தென்கிழக்கு வட்டாரம் ஆகியவை மற்றவை.

இதில் இணைந்துள்ள 14 பயிற்றுவிப்புப் பங்காளிகளைத் தவிர, மற்ற பங்காளிகளுடன் வேறு பல நிறுவனங்களையும் இணைக்க அந்தச் சமூக மேம்பாட்டு மன்றம் முற்படுகிறது.

தேவன் நாயர் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தில் ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இத்தகைய ஐந்து நிகழ்வுகளில் ஒன்று.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தெரிவுகளைச் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

வலுவான கட்டமைப்புகளையும் இணைப்புகளையும் கொண்டுள்ள இந்த மன்றங்கள், மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்