தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூரில் மோசடிகள் அதிகரித்துள்ளதன் எதிரொலி

மோசடிகளிலிருந்து பாதுகாக்க காவல்துறைக்கு அதிகாரமளிக்கும் புதிய மசோதா

2 mins read
0d03e668-a366-4dce-8c87-41ad8786607e
இந்த மசோதா, பணப்பரிவர்த்தனை தொடர்பிலான மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

மோசடிக்கு ஆளாகாமல் மக்களைக் காக்கும் இலக்குடன் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

‘மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் மசோதா’ எனப்படும் அதை உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் திங்கட்கிழமை (நவம்பர் 11) அறிமுகம் செய்தார்

இந்த மசோதா, பணப் பரிவர்த்தனை தொடர்பிலான மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும்.

2019 முதல் 2023 வரை சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்கள் ஐந்து மடங்கு அதிகரித்தன. கடந்த ஆண்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் $650 மில்லியன் இழந்ததைத் தொடர்ந்து இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது..

பாதுகாப்பு அம்சங்களும் மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும் விரிவான முயற்சிகள் தற்போது நடப்பில் உள்ளபோதும், தாங்களாக முன்வந்து மோசடிக்காரர்களுக்குப் பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2024 முற்பாதியில் புகார் அளிக்கப்பட்ட மோசடிகளில் 86 விழுக்காடு, பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து மோசடிக்காரர்களுக்குப் பணத்தை மாற்றியதால் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சின் அறிக்கை விளக்கியது.

பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு காவல்துறை, வங்கிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எச்சரித்தபோதும், அவர்கள் பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்தனர் என்று அமைச்சு கூறியது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

கட்டுப்பாட்டு உத்தரவு எனும் அம்சம் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளது. தனிநபர்கள் தங்கள் பணத்தை மோசக்காரர்களிடம் பறிக்கொடுப்பதைத் தடுப்பது இதன் நோக்கம்.

மோசடி செய்பவருக்குப் பணத்தை ஒருவர் அனுப்பவுள்ளார் என்ற சந்தேகம் இருந்தால், அவரின் வங்கிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவும் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.

அத்தகைய பரிவர்த்தனைகளைத் தடுப்பதில், வங்கிகளுக்குக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படும்.

மின்னிலக்கம், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி, அல்லது இணையவழி தொடர்புகள் வாயிலாகக் கணிசமான அளவில் நடத்தப்படும் மோசடிகளுக்கு மட்டுமே காவல்துறை கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

உதாரணமாக, தனிநபர் கலந்துரையாடல்கள், அல்லது தவறான புதுப்பித்தல் ஒப்பந்ததாரர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்குச் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இவற்றில் அடங்க மாட்டா.

கட்டுப்பாட்டு உத்தரவைப் பெறுவோருக்கு இணையம், தொலைபேசி வழியாகச் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள், பேநவ் உள்ளிட்ட பணப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஏடிஎம் கடன் வசதிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். இத்தகைய கட்டுப்பாடுகள், அதிகபட்சம் 30 நாள்கள் நீடிக்கும். போதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த கூடுதல் காலம் தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு உத்தரவைக் காவல்துறை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

ஒருவேளை 30 நாள் கட்டுப்பாடு தேவையில்லை எனக் காவல்துறை கருதினால், உத்தரவைத் திரும்பப் பெற முடியும். கட்டுப்பாட்டு உத்தரவுக்கு எதிராக தனிநபர்கள் காவல்துறை ஆணையரிடம் முறையிட மசோதா வாய்ப்பு தருகிறது.

இதற்கிடையே, மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்