ஊழியர்கள் ஓய்வுபெறுவதால் பல பத்தாண்டுகளாகத் திரட்டிய நிறுவன அறிவை இழந்துவிடக்கூடாது என்பதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இளைய தலைமுறையினருக்கு மூத்த ஊழியர்கள் வழிகாட்டிகளாகச் செயல்படவும் பகுதிநேர வேலைகளுக்கு மாறவும் ஏதுவாக வேலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன.
மூத்த ஊழியர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முத்தரப்புப் பணிக்குழுவும் (TWG-SE) பல்வேறு புதிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அப்பணிக்குழுவின்கீழ் ‘முதிர்ச்சியடைந்த ஊழியர்களுக்கான பலநிலை வாழ்க்கைத்தொழில் நடவடிக்கைக்கான செயற்கூட்டணி’ (AfA-EMW) செயல்படுகிறது.
முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தொடர்ந்து உற்பத்தித்திறனுடன் பொருத்தமான வேலைகளில் நீடிப்பதை இக்கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. வயதான ஊழியர்களுக்கு ஏற்ற வேலைகளை உருவாக்குவதுடன் பல தலைமுறையினரும் இணைந்து பணியாற்றும் சூழலைச் சாத்தியப்படுத்த முதலாளிகளுக்கு அது உறுதுணையாக இருக்கிறது.
ஏறத்தாழ 30 நிறுவனங்களுடன் இணைந்துள்ள இக்கூட்டணி, நான்கு முக்கியத் துறைகளில் தீர்வுகளை உருவாக்க நிதியுதவி வழங்குகிறது. பயிற்சி, வேலைப் பொருத்தம், நீக்குப்போக்கான வேலை நேரங்களை அனுமதிக்கும் மாற்று வேலைவாய்ப்பு மாதிரிகள், கட்டங்கட்டமான ஓய்வு ஆகியவையே அந்த நான்கு துறைகள். மூத்த ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதுடன் வேலைத் திட்டமிடல் ஆதரவையும் அது வழங்குகிறது.
வயதுக்கு ஏற்ற பணியிடக் கொள்கைகளைப் பின்பற்றும் நிறுவனங்களில் ஒன்று ‘ஷ்னைடர் எலெக்ட்ரிக்’ (Schneider Electric).
எரிசக்தி நிர்வாகம், மின்னிலக்க உருமாற்றம் ஆகிய துறைகளில் செயல்படும் இந்நிறுவனம், ஊழியர்களின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் நிறுவனத்திற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள ‘எக்ஸ்பீரியன்ஸ் ஃபார்வர்ட்’ (Experience Forward) எனப்படும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஷனைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நடைமுறைகளை நேரில் பார்வையிட, முத்தரப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அந்நிறுவனத்திற்கு வருகை புரிந்தனர்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) துணைத் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் டான், சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் (SNEF) துணைத் தலைவர் டான் வீ பின் ஆகியோர் அங்குச் சென்றனர்.
நிறுவனத்தின் வசதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணையமைச்சர் தினேஷ், சிங்கப்பூரர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்வதைச் சுட்டிக்காட்டினார்.
வேலை செய்ய விரும்பும் மூத்த ஊழியர்களின் பரந்த அனுபவத்திலிருந்து இளைய தலைமுறையினர் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். மூத்த ஊழியர்கள் நீண்ட காலம் பணியாற்றும் வகையில், அவர்களை வேறு பணிகளுக்கு மாற்றுவது குறித்து முத்தரப்புப் பணிக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஷ்னைடர் எலெக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் மூத்த ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை வேறு பொறுப்புகளில் அல்லது பகுதிநேர அடிப்படையில் தொடர்ந்து நிறுவனத்திற்குப் பங்களிக்கச் செய்வதாகத் துணையமைச்சர் தினேஷ் கூறினார். இது அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழவும் நிறுவனத்திற்குத் தொடர்ந்து பங்காற்றவும் வழிவகுக்கிறது என்றும் திரு தினேஷ் சொன்னார்.
மூத்த ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்குப் போதுமான கையிருப்பை வலுப்படுத்துவது என்டியுசியின் கடமை என்று திரு டான் வலியுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவு வேலையின் தன்மையை மாற்றும் இக்காலத்தில், மூத்த ஊழியர்களின் பரந்த அனுபவம், தொழில்துறை அறிவு, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளும்போது அவர்கள் தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.
எனவே, செயற்கை நுண்ணறிவுக்கும் மூத்த ஊழியர்களுக்கும் இடையிலான ஈடுசெய்யும் பலத்தைக் கருத்தில்கொண்டு, மூத்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மூத்த ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனம்
பலநிலை வாழ்க்கைத்தொழில் நடவடிக்கைக்கான கூட்டணியின் ஆதரவோடு ‘எக்ஸ்பீரியன்ஸ் ஃபார்வர்ட்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னேற்றம், தொடர்ச்சி, ஊக்கம், மாற்றம் ஆகிய நான்கு வழிமுறைகளை இத்திட்டம் கொண்டுள்ளது. ஊழியர்கள் தங்களது தொழிலில் முன்னேறவும், தற்போதைய பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவும், ஓய்வுக்காலத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் அவை சிறந்த வாய்ப்பளிக்கின்றன.
மேலும், வழிகாட்டிப் பயிலரங்குகள், தொழில்முறை உரையாடல்கள், வாழ்நாள் கற்றல் வாய்ப்புகள், உடல்நலப் பராமரிப்புத் திட்டங்கள், நிதித் திட்டமிடல் ஆதரவு ஆகிய வளங்களை ஊழியர்கள் இத்திட்டத்தின்வழி அணுகலாம்.
இத்தகைய முயற்சிகள் ஊழியர்களை எதிர்காலத்திற்குத் தயாரானவர்களாக மாற்றுவதுடன், தங்களது தொழில்வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கின்றன.

