மாதர் சாசனத்தில் குடும்ப வன்முறையின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் வன்முறைக்கு ஆளாவோருக்குப் புதிய நம்பிக்கையையும் உடனடித் தீர்வையும் தரும் என்று தாம் கருதுவதாகக் கூறினார், குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழுவின் (DVERT) மூத்த மேலாளர் குமரன் கோவிந்தராஜு.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் ஆதரவையும் சிறப்பான பாதுகாப்பையும் அளிக்கும் நோக்குடன் மாதர் சாசனத்தில் புதிய திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் நடப்புக்கு வரும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார் உள்துறை, சமுதாய குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்.
அவசரகால உத்தரவுகள், விரிவான வரையறைகள், மின்னணுக் கண்காணிப்பு உள்ளிட்ட அத்திருத்தங்கள் குறித்து தமிழ் முரசிடம் பேசிய திரு குமரன், “பெரும்பாலான குடும்ப வன்முறைச் செயல்கள் இரவு நேரத்தில் நடைபெறுகின்றன. அதுகுறித்த தகவல்கள் சமூக சேவை அமைப்புகளுக்கு மறுநாள் தெரியவர நேரிடும்.
“இருப்பினும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அவசரகால ஆணை’ எனும் அம்சம், ‘டிவெர்ட்’ அதிகாரிகள், அவசரகால ஆணையைப் பிறப்பிக்கவோ சம்பவ இடத்தில் அத்தகைய ஆணைகளை அதிகாரமுள்ள நபர்கள் பிறப்பிக்கக் கட்டளையிடவோ முடியும்.
“இதனால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோர், மேலும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாதவாறு, அவர்களைக் காக்க முடியும். அவர்களின் உடனடி மீட்பு சார்ந்த நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை இது தரும்,” என்று தெரிவித்தார் திரு குமரன்.
குடும்ப வன்முறைச் செயல்களின் தீவிரத்தைப் பொறுத்து பாதிக்கப்பட்டோர் இருக்கும் இடத்திற்கு விரைந்துசென்று அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குழுவின் பணிகளில் ஒன்று என்ற திரு குமரன், தொடர்ந்து அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“வன்முறைக்கு உள்ளாவோரும், அத்தகைய தீங்கிழைப்போரும் ஒரே வீட்டில் தொடர்ந்து வசிக்கும்பட்சத்தில், ‘டிவெர்ட்’ அதிகாரிகள் குடும்ப வன்முறை நிகழ்ந்த இடத்திற்குச் செல்வோம்.
“ஏனெனில் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதால் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதற்கான அபாயம் அதிகம். கொடுமைகள் மேலும் தீவிரமடையலாம். அவ்வகையில் தற்போது இணைக்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள், அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு மிகவும் திறம்படப் பதிலளிக்கக் கூடுதல் அதிகாரம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது,” என்றார் திரு குமரன்.
தொடர்புடைய செய்திகள்
வன்முறை சார்ந்த அனைத்துச் செயல்களுக்கும், அதைப் புரிந்தோரை உடனடியாகக் கைது செய்யமுடியாது என்பதால், ‘டிவெர்ட்’ அதிகாரிகள் அத்தகைய தருணங்களில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, தீர்வையும் ஆலோசனைகளையும் துரிதமாக வழங்க புதிய திருத்தங்கள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார் திரு குமரன்.
குடும்ப வன்முறையின் தொடர்பில் வரும் புகார்கள் பெரும்பாலும் கணவன் மனைவி இடையே நிகழ்பவையாக உள்ளன என்றும் சில நேரம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் வீடுகளில் சிக்கி அத்தகைய சம்பவங்களைப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறிய திரு குமரன், “வரவுள்ள திருத்தங்கள் அத்தகைய வன்முறைக்கு ஆளாவோர் உடனடி உதவியைப் பெறுவதை உறுதிப்படுத்தவும் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது,” என்றும் தெரிவித்தார்.


