இளம் சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கையில் செழிக்க அரசாங்க நிதியாதரவில் புதிய வேலைப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என்று தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
அதிகளவில் கவனம் செலுத்தும் குறிப்பிடத்தக்க அணுகுமுறையுடன் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டம் தொழில்நுட்ப கல்விக் கழகம், பலதுறை தொழிற்கல்லூரி, பல்கலைக்ழக மாணவர்களுக்கானது என்று சுட்டிய பிரதமர் வோங், பொருளியல் மோசமடைய நேரிட்டால் இத்திட்டத்திற்கான நோக்கம் அதிகரிக்கப்பட்டு அது விரிவுப்படுத்தப்படும் என்றும் சொன்னார்.
இத்திட்டம் குறித்த விவரங்களைப் பணிக்குழு விரைவில் வெளியிடும் என்று சொன்ன திரு வோங், வேலைவாய்ப்புடன் இளம் சிங்கப்பூரர்கள் அக்கறைகொள்ளூம் வீடு, பிள்ளை வளர்ப்பு தொடர்பிலான விஷயங்களிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் சொன்னார்.
“கடந்த ஆண்டு பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கூடுதல் மானியத்துடன் அதிக வீவக வீடுகள் கட்டியுள்ளோம்; பிள்ளைப் பராமரிப்பு தொடர்பில் உயர்ந்துவரும் செலவினங்களைச் சமாளிக்க அதிக உதவி, இளம் பெற்றோருக்குக் கூடுதல் விடுப்பு உள்ளிட்டவற்றை அளித்தோம்.
‘‘இன்னும் அதிகளவில் அவர்களுக்கு எவ்வாறு உதவிக்கரம் நீட்டலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்,” என்று விவரித்தார் திரு வோங்.
ஒற்றைப் பாதையில் கிட்டாது வெற்றி
தங்கள் வாழ்க்கைக் கனவுகள் நனவாகவும், தாங்கள் கொண்டிருக்கும் விருப்பங்களை நிறைவேற்றவும் தற்போது இளம் சிங்கப்பூரர்களுக்கு மாறுபட்ட பல்வேறு வழிவாசல்கள் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பாரம்பரியமாக வந்த வாழ்க்கைத் துறையைத் தெரிவு செய்யும் வரையறைக்குள் இப்போது அவர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இளையர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வருவதாகச் சுட்டிய திரு வோங், அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளைக் கூற அவர்கள் தயக்கம் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
“அவர்கள் எதிர்காலம் தொடர்பில் கருத்தில்கொள்ள புதிய நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், கலை, விளையாட்டு, புத்தாக்கம் சார்ந்த தொழில்துறைகள் உள்ளன. உள்ளடக்கப் படைப்பாளர்கள் அல்லது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும் அவர்கள் பணியாற்றலாம்,” என்ற திரு வோங், வெற்றிக்கான பாதை ஒரு வழியில்லை,” என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
படித்து முடித்துப் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்பு குறித்து பலர் கவலை கொள்வதை அறிந்துள்ளதாகச் சொன்ன திரு வோங், வாய்ப்புகள் வளங்கள் வழிகாட்டுதல்களுடன் அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை அரசாங்கம் நிச்சயம் நல்கும் என்றும் உறுதியளித்தார்.