ஒரு பெற்றோராகத் தம் மகள் தமிழ்மொழியைச் சரளமாகப் பேச ஊக்குவிப்பதில் சவால்களை எதிர்கொள்கிறார் திருவாட்டி சுபா ராவ், 47.
தாய்மொழி கன்னடம் என்பதால் இவருக்கே தமிழில் சில வார்த்தைகள் புரியாமல் இருக்கும் சூழல் அவரது வீட்டில் நிலவுகிறது.
இல்லத்தரசியான திருவாட்டி சுபா வீட்டில் மகளைத் தமிழ்ப் புத்தகங்களை அதிகம் படிக்க வைப்பது, முடிந்த அளவிற்குத் தமிழ் மொழியிலேயே பேச வைப்பது, தமிழ்க் காணொளிகளைப் பார்க்க வைப்பது போன்றவற்றைச் செய்து வைகிறார்.
பிள்ளைகள் தாய்மொழிமீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோரின் ஆதரவு மிக அவசியம் என நம்பும் திருவாட்டி சுபா, கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு பெற்றோருக்கு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் அமர்வில் தம் மகளுடன் கலந்துகொண்டார்.
தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு 2024ஆம் ஆண்டுக்கான தொடக்கநிலை தாய்மொழிப் பாடத்திட்டம் தொடர்பான பெற்றோர் ஈடுபாட்டு அமர்விற்கு ஏற்பாடு செய்திருந்தது.
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் ஐந்துமுதல் எட்டு வயதுக்கு உட்பட்ட சீன, மலாய், தமிழ்ப் பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
2024ஆம் ஆண்டின் தொடக்கநிலை தாய்மொழி பாடத்திட்டத்தின் முக்கிய கூறுகள் யாவை என்பதை ஒட்டிப் பெற்றோர்களும் பிள்ளைகளும் அறிந்துகொண்டனர்.
பிள்ளைகள் தாய்மொழியை மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமர்வின் முதல் அங்கத்தைக் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவில், தமிழ்மொழிப் பிரிவின் துணை இயக்குநர் மோகன் சுப்பையா வழிநடத்தினார்.
கற்றலை இனிமையாக்கும் வழிகளில் பிள்ளைகளுக்குப் பல வளங்கள் வழங்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, பல்வேறு பண்பாடுகள் சார்ந்த புரிந்துணர்வை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் நடவடிக்கைகள், வெவ்வேறு கற்றல் முறைகள் போன்றவற்றைப் பற்றி திரு மோகன் விளக்கினார்.
இவ்வாண்டிலிருந்து தொடக்கநிலை ஒன்று, இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழி வகுப்பு நேரத்தில் 30 நிமிடங்கள் வாசிப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2029க்குள் அனைத்து தொடக்கநிலைகளுக்கும் புதிய தாய்மொழிப் பாடத்திட்டத்துடன் விரிவாக்கப்படும்.
பெற்றோர்கள் வகுப்பறையைத் தாண்டி வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் தாய்மொழி ஆர்வத்தைப் புகட்டும் வழிகளை ஒட்டியும் அமர்வில் பேசப்பட்டது.
பெற்றோர்கள் எத்தகைய வளங்களை நாடலாம், எந்த மின்னிலக்க வளங்களைத் தங்கள் பிள்ளைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்பன போன்ற விவரங்களும் பகிரப்பட்டன.
மேலும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று தாய்மொழிக் கருத்தரங்கு புதிய இடத்தில் எக்ஸ்போ மண்டபத்தில் நடைபெறும் என்றும் திரு மோகன் குறிப்பிட்டார்.
அமர்வின் இரண்டாம் கட்டத்தில் தாய்மொழிக் கல்வித் திட்ட நிபுணர்களால் அவரவர் மொழிகளில் தனித்தனியான அமர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழ்மொழிக்கான அமர்வைப் பாடக்கலைத்திட்ட அதிகாரி அருள்மதி லெனின் வழிநடத்தினார்.
அதில் வீட்டில் தமிழ்மொழியின் முக்கியத்துவம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. தமிழ்ப் பெற்றோர்கள் பலர், பிள்ளைகள் தமிழில் பேசுவதைப் பெரிய சவாலாகக் கருதுகின்றனர்.
அமர்வு மூலம் பயன் கண்ட மற்றொரு பெற்றோரான திருவாட்டி சரஸ்வதி வள்ளியப்பன், 37, வீட்டில் பெரும்பாலும் தமிழில் பேசுவதால் பிள்ளைகள் தமிழ்மொழிமீது ஆர்வம் கொண்டுள்ளதாகச் சொன்னார்.
“தமிழ்ப் புத்தகங்கள் படிப்பது, பிடித்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தமிழில் அறிமுகப்படுத்துவது, தமிழ் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வது போன்ற வழிகளைக் கையாள்கிறோம்,” என்றார் திருவாட்டி சரஸ்வதி.
“பிள்ளைகளுக்கு மின்னிலக்க வளங்கள் அதிகம் இருந்தாலும் பெற்றோர்கள் திரை நேரத்தையும் குறைக்கும் வகையில் ஒரு சமநிலையைப் பேண வேண்டும். சிறிது நேரம் இணையத்தளத்தில் பாடத்தைக் கற்பித்துவிட்டு அதைப் பற்றிப் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உரையாடலாம். தாய்மொழியைக் கற்பிப்பதில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளுடன் இணைந்து மொழியை மகிழ்வுடன் கற்கலாம்,” என்று திரு மோகன் ஆலோசனை கூறினார்.