மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய டாக்சி சேவைத் திட்டத்துக்கு வரவேற்பு

மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய டாக்சி சேவைத் திட்டத்துக்கு வரவேற்பு

2 mins read
வருமானத்தை அதிகரிக்க உதவும் என்கின்றனர் டாக்சி ஓட்டுநர்கள்
d90eae7b-74ea-4ff3-be82-fa576e1945d0
எல்லை தாண்டிய சேவை வழங்கும் டாக்சிகள் மே 4ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலும் ஜோகூர் பாருவிலும் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை இறக்கிவிடலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எல்லை தாண்டிய டாக்சி சேவைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களை மலேசியா, சிங்கப்பூர் என இருதரப்பிலும் டாக்சி நிறுவனங்களுடன் ஓட்டுநர்களும் வரவேற்றுள்ளனர்.

இத்தகைய சேவை வழங்கும் டாக்சிகள் மே 4ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலும் ஜோகூர் பாருவிலும் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை இறக்கிவிடலாம் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டது. மேலும், பயணிகளை ஏற்றிக்கொள்ள இரு தரப்பிலும் தலா மேலும் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகளும் இதை அறிவித்தன.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால் அதிகாரிகளின் அனுமதியுடன் இந்தச் சேவையில் கூடுதலான டாக்சிகளை இணைக்கவும் திட்டமிருப்பதாக சிங்கப்பூர் டாக்சி நிறுவனங்கள் கூறியுள்ளன.

புதிய மாற்றங்கள், எல்லை தாண்டிய டாக்சி சேவைக்குக் கூடுதல் உத்தரவாதம் அளிப்பனவாக அமைந்துள்ளதாகக் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் கூறியுள்ளது.

கம்ஃபர்ட், சிட்டிகேப் டாக்சிகளை இயக்கும் அந்நிறுவனத்தின் ஓட்டுநர்கள் 145 பேர் இச்சேவைக்கு உரிமம் பெற்றுள்ளனர். மே 4ஆம் தேதி முதல் ஆறு இருக்கைகள் கொண்ட டாக்சிகளும் எல்லை தாண்டிய டாக்சிச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அது கூறியது.

டிரான்ஸ்-கேப், பிரைம் குழுமம், ஸ்டிரைட்ஸ் பிரீமியர் ஆகியவையும் தேவையேற்பட்டால் கூடுதலான டாக்சிகளை இச்சேவையில் இணைக்கத் தயார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் சிலர், எல்லை தாண்டிய டாக்சி சேவை வழங்கினால் வருமானம் கூடும் என்று குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது. உள்ளூரில் குறிப்பாக இரவு நேரங்களில் டாக்சிக்கான தேவை குறைவாக உள்ள நிலையில், சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான சேவை மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை இறக்கிவிட முடியும் என்ற புதிய விதிமுறை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மலேசிய ஓட்டுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர், சிங்கப்பூரில் மின்னியல் சாலைக் கட்டணம் செலுத்தும் கருவிகளைத் தங்கள் வாகனங்களில் பொருத்தத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்