தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எதிரொலி’ நிகழ்ச்சி சிந்தனையைத் தூண்டும் தளம்: தினேஷ் வாசு தாஸ்

2 mins read
41ecd397-50a9-4b92-a5c4-21fa80c759f0
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ‘எதிரொலி’ நிகழ்ச்சியின் புதிய பரிமாணத்திற்கான அறிமுக நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்துச் சிறப்புரை ஆற்றினார் துணை அமைச்சர் தினேஷ்.  - படம்: எதிரொலி

‘எதிரொலி’ நிகழ்ச்சி சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தின் வாழ்க்கை முறை, சிந்தனை, எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை எதிரொலிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இளையர்களின் மனநலம், தனிமையில் வாழும் மூத்தோர் போன்ற முக்கியமான அம்சங்களை எதிரொலி ஆராய்ந்து வந்துள்ளது,” என்றார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ‘எதிரொலி’ நிகழ்ச்சியின் புதிய பரிமாணத்திற்கான அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் திரு தினேஷ்.

22 ஆண்டுகளாகச் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் குரலாக விளங்கும் ‘எதிரொலி’ நிகழ்ச்சி சிந்தனையைத் தூண்டும் தளமாக வளர்ந்திருக்கிறது எனக் குறிப்பிட்ட திரு தினேஷ், இன்றைய சூழலில் இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மேலும் கவனிப்பதற்குத் தாமும் மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளையும் தலைமையேற்றுள்ள புதிய சமூகக் குழுவில் எதிரொலி போன்ற ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியம் என நம்புவதாகத் தெரிவித்தார்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ‘எதிரொலி’ நிகழ்ச்சி ஒரு புதிய தோற்றத்துடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

கன சதுர (cube) வடிவில் அதன் புதிய சின்னம் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் கண்டது.

கன சதுரத்தில் எவ்வாறு பல பக்கங்கள் உள்ளனவோ அதேபோலப் பற்பல புதிய அம்சங்கள் எதிரொலியின் புதிய பரிமாணத்தைப் பிரதிபலிக்கின்றன.

“ மக்கள், பிரமுகர்களின் கருத்து என வெவ்வேறு கோணங்களில் பல்வேறு தலைப்புகளை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆராய்கிறோம். அதன் பிரதிபலிப்பாகத்தான் கன சதுர வடிவில் புதிய தோற்றத்தைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந. குணாளன்.

இளையர்கள் முன்வந்து தங்களது கருத்துகளையும் மனத்திற்கு நெருக்கமான தலைப்புகளையும் முன்வைக்க வேண்டும்; எதிரொலி நிகழ்ச்சிகளில் அங்கம் வகிக்க வேண்டும் எனத் திரு குணாளன் கேட்டுக்கொண்டார்.

ஆழமான நேர்காணல்களுடன் வெவ்வேறு தலைப்புகளையொட்டி பொதுமக்களுடன் சோதனை முயற்சிகள் மேற்கொள்வது போன்ற பல புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

எதிரொலி, மக்களின் மாறிவரும் ரசனைக்கும் எதிர்பார்ப்புக்கும் தொடர்ந்து ஈடுகொடுக்க இது உதவும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் எதிரொலிக் குழுவினர்.

இதுவரை பின்னணியில் இருந்த தயாரிப்பாளர்களை முன்னிறுத்தி படைப்பாளர்களுடன் இணைந்து படைக்கவுள்ளனர்.

அவர்களில் ஒருவர் எதிரொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் யோகேஸ்வரன், 30.

“மெய்நிகர் தொழில்நுட்பம் போன்ற புதுமையான அம்சங்களைப் பயன்படுத்தவிருக்கறோம். இனி தயாரிப்பாளர்களும் இயக்கம், தயாரிப்புக்கு அப்பால் படைப்பாளராகவும் இருப்பது ஒரு சவாலாக இருக்கும். ஆனால் அது நமக்குப் பல கதவுகளைத் திறக்கும். அதற்கான பயிற்சிகளையும் பெற விரும்புகிறோம்,” என்றார் யோகேஸ்வரன்.

இந்த ஆண்டின் மீடியாகார்ப் பிரதான விழாவில் சிறந்த தகவல் நிகழ்ச்சி, சிறந்த தகவல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இரு விருதுகளைத் தட்டிச்சென்றது எதிரொலி நிகழ்ச்சி.

குறிப்புச் சொற்கள்