பொருளியல் வளர்ந்தாலும் ஊழியர் கட்டமைப்பில் இடைவெளி: இங் சீ மெங்

பொருளியல் வளர்ந்தாலும் ஊழியர் கட்டமைப்பில் இடைவெளி: இங் சீ மெங்

படம்: எஸ்பிஎச் மீடியா

22 Oct 2026 - 7:23 pm

2 mins read

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் அதன் ஊழியரணிக் கட்டமைப்பில் புதிய இடைவெளிகள் தென்படுவதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்

கடந்த மூன்று ஆண்டுகளாக 5 விழுக்காடு வளர்ச்சி பதிவுசெய்யப்பட்ட அதே வேளை, கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிலவிய ஆட்குறைப்பு எண்ணிக்கையை தற்போதைய நிலை எட்டியுள்ளதை அவர் சுட்டினார்.

பிரதமர் அலுவலக அமைச்சருமாகிய திரு இங், நாட்டில் நல்ல முன்னேற்றம் தொடர்ந்தாலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பல காரணங்கள் உள்ளதெனக் கூறினார்.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 4,620 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்முறை மறுவடிவமைப்பு காரணமாக இருக்கலாம் என்றும் சொன்னார்.

மேலும், வேலை தேடிக்கொள்வதில் புதிய பட்டதாரிகள் காலதாமதத்தை எதிர்நோக்குவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆகவே, ஊழியர் அமைப்புடன் ஒருங்கிணைந்து, செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்யும்படி நிறுவனங்களைத் திரு இங் கேட்டுக்கொண்டார்.

அதை எவ்வாறு மேற்கொள்வது என்பதுதான் முக்கியக் கேள்வி என்று அவர் சுட்டினார்.

மரினா பே வளாகத்தில் கேபிஎம்ஜி நிறுவனத்துடன் என்டியுசி வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஏற்பாடு செய்திருந்த அவ்விரு அமைப்புகளின் புதிய கூட்டு நிபுணத்துவச் சேவைகளின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் இங் கலந்துகொண்டு உரையாற்றினார். தொழில்துறைத் தலைவர்களும் தொழிற்சங்கப் பேராளர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொண்டு ஊழியரணியை உருமாற்ற உதவும் நோக்குடன் ஒரு செயல்திட்டத்தை என்டியுசியும் கேபிஎம்ஜி நிறுவனமும் இணைந்து வடிவமைக்கும் என்று திரு இங் தெரிவித்தார்.

என்டியுசி வழங்கும் நிறுவனப் பயிற்சிக் குழு, ஊழியரணி உருமாற்றத் தொகுப்பு என்ற இரு மானியங்களை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்