சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் (என்யுஎச்) மூத்த நோயாளிச் சேவை அதிகாரியாகப் (senior patient service associate) பணியாற்றிய மாது ஒருவர் பணியில் இருந்தபோது அனுமதியின்றி நோயாளிகளின் தகவல்களைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்
குற்றவாளியான புபனேஸ்வரி பூபாலா, 39, மருத்துவமனையின் ‘சேப்’ (SAP) தளத்துக்குள் தான் செல்வதைக் காணொளியில் பதிவு செய்திருக்கிறார். ‘சேப்’, நோயாளிகளின் தகவல்களைக் கவனித்துக்கொள்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்காக மருத்துவமைனைகள் பயன்படுத்தும் தளமாகும்.
கணினி முறையைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சிங்கப்பூரரான புபனேஸ்வரி திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஒப்புக்கொண்டார். இப்போது என்யுஎச்சில் வேலை செய்யாத அவருக்கு 3,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூனுக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாளம் வெளியிடப்படாத ஒருவரிடமிருந்து புபனேஸ்வரியின் வீட்டுக்குப் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த ஆடவர் ஒருவர், சாட்சி என்று நீதிமன்ற ஆவணங்களில் அழைக்கப்பட்டார்.
அவரின் அடையாளம், அவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான தொடர்பு போன்ற தகவல்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.
அதேபோல், பாதிக்கப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர்தான் தனக்குக் கடிதங்களை அனுப்பியிருப்பார் என்று புபனேஸ்வரி ஊகித்தார். சுகாதாரத் துறையில், புபனேஸ்வரியின் வீட்டு முகவரியைப் பெற்றுத் தரக்கூடியோரை அந்தப் பெண்ணுக்குத் தெரியும் என்பது அதற்குக் காரணம்.
அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடவும் அனுமதி வழங்கப்படவில்லை.
சாட்சி என்று கூறப்படும் ஆடவரிடம் புபனேஸ்வரி பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படும் பெண், புபனேஸ்வரிக்குக் கடிதங்களை அனுப்பியிருப்பார் என்ற ஊகத்தை ஆடவர் மறுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து புபனேஸ்வரிக்கும் அந்த ஆடவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு 2023 அக்டோபர் 23ஆம் தேதி இரவு என்யுஎச்சில் பணியில் இருந்தபோது புபனேஸ்வரி, பாதிக்கப்பட்டவர் என்றழைக்கப்படும் பெண்ணின் தகவல்களை மீட்பதற்காகத் தான் ‘சேப்’ தளத்தை உபயோகித்ததைக் காணொளியில் பதிவுசெய்தார்.
மூத்த நோயாளிச் சேவை அதிகாரி என்ற பொறுப்பின்கீழ் மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரம், செலுத்தவேண்டிய கட்டணம் போன்ற விவரங்களைப் பெற புபனேஸ்வரிக்கு அதிகாரம் உண்டு; அதேவேளை, தனது கட்டுப்பாட்டுக்குக்கீழ் வராத நோயாளிகளின் தகவல்களைப் பெற அவருக்கு அதிகாரம் கிடையாது என்று துணை அரசாங்க வழக்கறிஞர் சேமுவெல் சியூ குறிப்பிட்டார்.

