பாலர் பள்ளியில் சிறுவனைத் துன்புறுத்திய முன்னாள் அதிகாரிக்குச் சிறை

2 mins read
f99fdcd6-9298-4efc-b70d-05ee014302df
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பள்ளி ஒன்றில் ஐந்து வயது சிறுவனைத் துன்புறுத்திய அதிகாரிக்கு வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) 26 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் அந்த அதிகாரி இருந்தார்.

குற்றவாளியான சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த 54 வயது மாது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று அச்செயலைப் புரிந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் பதவி விலகினார்.

சிறுவனைத் துன்புறுத்தியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஜூலை இரண்டாம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளம் குறித்த விவரங்களை வெளியிட அனுமதி இல்லை. அதனால் குற்றவாளியின் பெயர், சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி ஆகிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பந்தப்பட்ட பாலர் பள்ளியின் பிள்ளைப் பராமரிப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன்கீழ் அவர் வார நாள்களில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணிவரை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

சம்பவம் நிகழ்ந்த நாளில் அச்சிறுவனும் வேறொரு பிள்ளையும் வகுப்பறையில் இருக்கும் கை கழுவும் குழாய்ப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்ததைக் குற்றவாளி பார்த்திருக்கிறார். உணவருந்துமாறு தான் கூறியதற்கு ஏற்ப பிள்ளைகள் இருவரும் நடந்துகொள்ளாததால் அவர் ஆத்திரமடைந்தார்.

விளையாட்டுத்தனமாக இருந்த அப்பிள்ளைகள், முன்னதாக உறங்கும் நேரத்தில் இடையூறு விளைவித்ததற்காகவும் அவர் கோபமடைந்திருந்தார்.

பிற்பகல் 3.10 மணிக்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர், சம்பந்தப்பட்ட சிறுவனின் இரு கைகளையும் பிடித்து குழாய்ப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார். சிறுவனின் கைகளைப் பிடித்து சுமார் ஆறு வினாடிகளுக்கு அவரைச் சுற்றினார் என்றும் ஈரமாக இருந்த தரையுடன் சிறுவனுடைய உடலின் கீழ்ப்பகுதி பலமுறை மோதியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனுடைய தலையின் பின்பகுதியைத் தரையை நோக்கித் தள்ளிவிடுவது போன்ற செயல்களிலும் குற்றவாளி ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் வீடு திரும்பியபோது முகத்திலும் கழுத்திலும் கீறல்கள் இருந்ததை அவரின் தந்தை கவனித்தார். மறுநாள் சிறுவனின் பெற்றோர் அந்த பாலர் பள்ளியின் தலைமை அதிகாரியிடம் புகார் கொடுத்தனர். பின்னர் அந்த அதிகாரி காவல்துறையிடம் புகார் தந்தார்.

குறிப்புச் சொற்கள்