ஆலயங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டூழியத்தில் ஈடுபட்ட எட்டுப் பேர், உன்னத விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நடந்த இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர் விருது நிகழ்ச்சியில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகிய நான்கு இந்து ஆலயங்களை வாரியம் கவனித்துவருகிறது.
ர. தனசேகரன்
விருது பெற்றவர்களில் ஒருவரான ர. தனசேகரன், தீமித் திருவிழாவுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பூக்குழியைக் கவனித்துவருகிறார். பூக்குழியில் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அனுபவம்வாய்ந்த, துணிச்சல்மிகு தொண்டூழியர்க் குழுவில் திரு தனசேகரன் 1984ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றிவருகிறார்.
“பூக்குழியைக் கையாள நீங்கள் மிகுந்த துணிச்சல்மிக்கவராக இருக்கவேண்டும். உங்களுக்கு பயம் இருக்கக்கூடாது,” என்றார் ஓய்வுபெற்ற 60 வயது தனசேகரன்.
“நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தீக்காயங்கள் ஏற்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
1981ஆம் ஆண்டில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தொண்டூழியராகப் பணியாற்றத் தொடங்கியபோது இவர் பதின்ம வயதினராக இருந்தார்.
தயாராம் ஷிவ்நாத்
இந்து அறக்கட்டளை வாரிய உன்னத விருதைப் பெற்ற மற்றொருவரான தயாராம் ஷிவ்நாத், 65, கடந்த 24 ஆண்டுகளாக ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அமைதியான முறையில் கோயில் செயல்பாடுகளில் கைகொடுத்துவருகிறார். கோயில் வளாகத்தை நன்றாக வைத்திருப்பது, அலங்காரங்களைத் தயார்செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபடுகிறார்.
“பெரியாச்சி அம்மன் வழிபாடு, பிரம்மோத்சவத் திருவிழா போன்ற பல நிகழ்ச்சிகள் அக்கோயிலில் நடைபெறும். அப்போது கூட்டத்தைச் சமாளிக்க உதவுவது, உணவுப் பரிமாறுவது உள்ளிட்ட பணிகளில் நான் ஈடுபடுவேன்,” என்றார் திரு தயாராம்.
கலாசார, சமூக இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“தொண்டூழியம் என்பது நேரத்தைச் செலவிடுவதையும் தாண்டியதாகும். அது, பிணைப்புகளை வளர்த்துக்கொள்வது, நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வது, பெரிய குறிக்கோளை நிறைவேற்ற மக்கள் ஒன்றுபடுவதற்கு வகைசெய்யும் வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை சார்ந்ததாகும்,” என்று திரு தினேஷ் குறிப்பிட்டார்.


