‘வருகையாளர்’ என்ற பெயரில் கையில் ஆயுதமேந்தியபடி, பள்ளிக்குள் நுழைந்தவரைக் கையாளும் நடைமுறைகள், புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியில் பாவனைப் பயிற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையின் மேற்பார்வையுடன் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்ட அப்பயிற்சி, வியாழக்கிழமை (அக்டோபர் 22) நடந்தது. அதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியின் முடிவில் காவல்துறையினர் அவர்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
பயிற்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாக கத்தி ஒன்றை ஏந்திய ‘வருகையாளர்’ பள்ளிக்குள் ஊடுருவியதை அறிந்ததும் மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களைத் தேடி அங்கு ஒளிந்துகொண்டனர்.
வகுப்பறைகள் தாழிடப்பட்டன, ஆயுதமேந்தியவரின் பார்வை படாதபடி மாணவர்களும் ஊழியர்களும் செயல்பட்டனர். பள்ளியின் அவசரகால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.
பாவனைப் பயிற்சியில் 1,100 மாணவர்களுடன் 160 ஊழியர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஏற்ப அனைவரும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவசரகால தயார்நிலை செயல்பாடுகளைப் பார்வையிட வந்திருந்த கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மாணவர்களும் ஆசிரியர்களும் பயிற்சியின்போது ஒருங்கிணைந்து செயல்பட்டதைக் கண்டு மனநிறைவு அடைந்ததாகக் கூறினார். அடுத்தவர் நலன் உட்பட ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்புக் குறித்துஅக்கறை கொண்டதை அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் வழக்கமான பயிற்சிகள் நம்பிக்கை, மீள்திறன், தயார்நிலை போன்ற நற்பண்புகளை அவசரகாலங்களில் வெளிப்படுத்த உதவும் என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) அவரது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்தார்.
பயிற்சியின்போது, பள்ளி அதன் தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றத் தொடர்புக்கான உள்கட்டமைப்பை செயல்படுத்தி, முன்னெச்சரிக்கை செய்திகளை வெளியிட்டது. பள்ளியின் இயல்பான நடைமுறைகள் முடக்கப்பட்டன. மாணவர்களும் ஊழியர்களும் ஓடி மறைந்துகொள்ளுதல், செய்தியைப் பகிர்தல் ஆகிய அதிகாரபூர்வ நெறிமுறைகளை கையாண்டனர்.
அதன்படி நெருக்கடியான நேரங்களில் அவர்களால் முடிந்தால் பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடிச் சென்றுவிடுவது, இல்லையென்றால் யாரும் அறியாத வகையில் பதுங்கிக்கொள்வது, பிறகு அதிகாரிகளிடம் தெரிவிப்பது ஆகிய செயல்முறைகளைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கப்படுகிறது.
ஆபத்தான வருகையாளர்கள், தீச் சம்பவங்கள், வெடிகுண்டு மிரட்டல், போன்ற அவசரகாலங்களின்போது தயார்நிலையில் இருப்பதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் வழக்கமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அனைத்து தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா பல்கலைக்கழகங்கள், சிறப்பு கல்வி நிலையங்கள் ஆகியன ஆண்டுக்கு மூன்று அவசரகால பயிற்சிகளை நடத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. அப்பயிற்சிகள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை ஆகிய அமைப்புகளில் வழிகாட்டுதலின்படி திட்டமிடப்படுகின்றன.
உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் விதமாக பயிற்சிகள் ஆய்வு செய்யப்பட்டு பிறகு புதிய மாறுபட்ட வடிவங்களில் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படுகின்றன.
