சிங்கப்பூர் உட்பட 27 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பிப்ரவரி 24ஆம் தேதிக்கும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த தற்காப்பு பாவனைப் பயிற்சியில் பங்கேற்றனர்.
இணையத்தாக்குதல்கள் ஏற்பட்டால் அவற்றை எப்படி சமாளிப்பது குறித்து பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
‘டிஃபன்ஸ் சைபர் மார்வல்’ (Defence Cyber Marvel) என அழைக்கப்படும் இப்பாவனைப் பயிற்சியின்போது, உண்மையான இணையத் தாக்குதல்காரர்களால் பின்பற்றப்பட்ட உத்திகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு சவால்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
நான்காவது முறையாக நடைபெற்ற இந்த வருடாந்தரப் பயிற்சியை பிரிட்டிஷ் ராணுவ இணைய அமைப்பு, தென்கொரியத் தலைநகரான சோலில் நடத்தியது.
சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் இணையத் தற்காப்புக் குழு சிங்கப்பூர் சார்பாக இப்பயிற்சியில் தொலைநிலையிலிருந்து கலந்துகொண்டனர்.
பயிற்சி முழுவதும் உயர்மட்ட தொழில்முறைத் திறனை எங்கள் இணையத் தற்காப்பாளர்கள் வெளிப்படுத்தியதாக இணையத் தற்காப்புக் குழுத் தளபதி, மூத்த லெப்டினன்ட்-கர்னல் மோக் சுவான் ஹாவ் கூறினார்.
இப்பயிற்சி சிங்கப்பூரின் சிறந்த நடைமுறைகளை மதிப்பீடு செய்யவும் நமது பிரிட்டிஷ் சகாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நுண்ணறிவுகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் மின்னிலக்க, உளவுத்துறைப் படை இப்பாவனைப் பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.