சிங்கப்பூர்த் தேசிய கலைக்கூடத்தின் நகர மண்டப அறைக்குள் நுழையும் பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் பயணம் காத்திருக்கிறது.
சிங்கப்பூரில் பல்லினத்துவம் இயல்பாகவே உருவான ஒன்று அல்ல, மாறாக கொள்கை விவாதங்கள், சமூகச் சவால்கள், சாதாரண மக்களின் அன்றாடத் தேர்வுகள் ஆகியவற்றின் வழியாக காலப்போக்கில் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதை உணர்த்தும் கண்காட்சி ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நிறுவியோர் நினைவகம் வழங்கும் ‘பார்வையாளர்கள் மட்டுமல்லர்: சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு உருவாக்கங்கள்’ (Not Mere Spectators: The Makings of Multicultural Singapore) எனும் அக்கண்காட்சி, பொதுமக்களை 1950கள் முதல் 1970கள் வரையிலான காலப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறது.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இனம், மொழி, தேசிய அடையாளம் சார்ந்த கருத்துகள் தீவிரமாக விவாதிக்கப்பட்ட ஒரு முக்கியமான காலகட்டம் அது.
மங்கலான ஒளி அமைப்புடன் கூடிய அறைக்குள் அடியெடுத்து வைக்கும் முதல் தருணத்திலிருந்தே, பார்வையாளர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், சிந்தனையில் ஈடுபடும் பங்கேற்பாளர்களாக மாறும்படி அந்தக் கண்காட்டி அழைக்கிறது
பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட மண்டலங்களில் பல்லூடக அமைப்புகள், வரலாற்று ஆவணங்கள், கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாட்டைச் சார்ந்திருப்பது என்றால் என்ன, வேற்றுமையில் ஒற்றுமை சாத்தியமா, பல்லின சமூகத்தைப் பேணுவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கு என்ன போன்ற இன்றும் எதிரொலிக்கும் கேள்விகளை அன்றைய சிங்கப்பூரர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது இங்கு ஆராயப்படுகிறது.
கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, தேசத் தன்னாட்சியின் தொடக்க ஆண்டுகளில் நடைபெற்ற ‘அனேகா ராகம் ராயாட்’ (Aneka Ragam Ra’ayat) எனும் மக்கள் பண்பாட்டு நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் ஓர் உயிரோவியக் குறும்படம்.
தொடர்புடைய செய்திகள்
தேசத்தைக் கட்டமைத்ததில் குடிமக்கள் ஒருபோதும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்லர் எனும் கண்காட்சியின் மையக்கருத்தை இது உணர்த்துகிறது. குறிப்பாக, தற்போது தேசிய கலைக்கூடம் அமைந்துள்ள அதே இடத்தில் அமைந்திருந்த நகர மண்டபத்தில்தான் அக்காலத்தில் நிகழ்ச்சிகள் மேடையேறின.
கண்காட்சியின் உள்ளே செல்ல செல்ல குடிமக்களின் தனிப்பட்ட கதைகள், தேசிய உறுதிமொழி தொடர்பான உண்மைக் கடிதங்கள், அமரர் எஸ். ராஜரத்தினத்தின் ‘எ நேஷன் இன் த மேக்கிங்’ (A Nation in the Making) படைப்பைத் தழுவிய மூன்று பகுதி ஒலி நாடகம் ஆகியவற்றை அனுபவிக்கலாம். இவை மொழி, இனம், தேசிய உணர்வு ஆகிய கருப்பொருள்களை விரிவாக ஆராய்கின்றன.
இருவழித் தொடர்புகொள்ளும் அம்சங்கள், பார்ப்பதோடு நின்றுவிடாமல் நன்கு கவனிக்கவும், செவிமடுக்கவும், பதிலளிக்கவும் பார்வையாளர்களை அழைக்கின்றன. பழக்கமான சமூக இடங்களைக் காட்சிப்படுத்தும் புகைப்படக்கூடம், பார்வையாளரை மையப்படுத்தி அசைவை உணரும் (motion-sensor) நடன அமைப்பு போன்றவை அதில் அடங்கும்.
கண்காட்சி முழுவதும் இடம்பெற்றுள்ள உரையாடல் குறிப்புகளும் சிந்தனைச் சுவர்களும், இன்று பள்ளிகள், அண்டை வீடுகள், பொது இடங்களில் பல்லினப் பண்பாடு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது, மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகின்றன.
மார்ச் 29 வரை நடைபெறும் இக்கண்காட்சி, பல்லினத்துவம் என்பது வரலாற்றில் முடிந்துபோன ஓர் அத்தியாயம் அன்று மாறாக விழிப்புணர்வுடனான முயற்சி தேவைப்படும் ஒரு தொடர் பயணம் என்பதை நிகழ்காலத்துடன் இணைத்து நினைவூட்டுகிறது.
இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

