ஸ்டாம்ஃபர்ட் சாலையில் உள்ள தேசிய அரும்பொருளகத் திடலில் ‘நீங்களும் நானும்’ (U & Me) எனும் தற்காலிக அரும்பொருளகம் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு சிங்கப்பூரர்களும் வழங்கிய அன்றாடப் பொருள்களின் தொகுப்பின் மூலம் சிங்கப்பூர் வரலாற்றைச் சொல்லும் இந்த அரும்பொருளகம் டிசம்பர் 14ஆம் தேதிவரை செயல்படும். அனுமதி இலவசம்.
சிங்கப்பூர் உடை வடிவமைப்பாளர் பென்னி ஓங் எடுத்த இளவரசி டயானாவின் அளவு, ஓய்வுபெற்ற ஓட்டப்பந்தய வீரர் சி. குணாளன் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வு செய்யப்பட்டபோது அளிக்கப்பட்ட கைக்கடிகாரம், 1970களிலும் அதன் பிறகும் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட செட்ரான் தொலைக்காட்சி போன்ற பல பொருள்களை அங்கு காணலாம்.
அவற்றில் சில தேசிய சேகரிப்பின் ஒரு பகுதி. மற்றவை On The Red Dot காட்சித் தொடரிலிருந்து இரவல் பெற்றவை.
சுதந்திரத்திற்கு முந்தைய சிங்கப்பூர், ஊழியர், உணவு, பொழுதுபோக்கு, தேசிய வளர்ச்சி ஆகிய ஐந்து பிரிவுகளாகக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகில் 18ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டைத் தாங்கிய மணற்கல், ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வருகையளித்ததைக் குறிக்கும் 1919ஆம் ஆண்டின் நூற்றாண்டுப் பதக்கம் போன்ற சிங்கப்பூரின் பிரபலமான கலைப்பொருள்களின் மாதிரிகளையும் மறுஉருவாக்கங்களையும் அங்கு காணலாம்.
புகைப்படங்களின் தொடருக்குள் மறைந்துள்ள பொருள்களைக் கண்டுபிடிக்கும் மின்னிலக்க விளையாட்டில் வெற்றிபெறுவோர் அரும்பொருளகத்தில் இடம்பெற்றுள்ள கலைப் பொருள்களைச் சித்திரிக்கும் அட்டைகளைப் பரிசாகப் பெறுவர்.
‘நீங்களும் நானும்’ அரும்பொருளகம் பற்றிய கூடுதல் தகவல்களை https://www.nhb.gov.sg/nationalmuseum/whats-on/exhibition/museum-of-u-and-me என்ற இணையத்தளத்தில் காணலாம்.