தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலடிப் பல்லுயிர்ச்சூழல் குறித்து ஆராய இந்தியப் பெருங்கடலுக்குப் புறப்பட்ட வல்லுநர் குழு

2 mins read
f4a3a668-03aa-4cbe-9ea1-a976588a5116
21 ஆய்வாளர்களுடன் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குப் புறப்பட்ட ‘ஓஷன்எக்ஸ்புளோரர்’ ஆய்வுக் கப்பல். - படம்: ஓஷன்எக்ஸ்

பெரிதும் ஆராயப்படாத கிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதற்காக சிங்கப்பூர், தென்கிழக்காசியா, பசிபிக், அமெரிக்கா ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 21 ஆய்வாளர்கள் குழு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) ‘மரினா அட் கெப்பல் பே’யிலிருந்து புறப்பட்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் ஓஷன்எக்ஸ் என்ற லாப நோக்கமற்ற அமெரிக்க நிறுவனத்தின் கூட்டுமுயற்சியாக இந்த 24 நாள் ஆய்வுப்பயணம் இடம்பெறுகிறது.

‘ஓ‌ஷன்எக்ஸ்புளோரர்’ எனும் அறிவியல் ஆய்வுக் கப்பலை ஓஷன்எக்ஸ் நிறுவனமே இயக்குகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தேசிய எல்லைக்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ச்சூழல் (பிபிஎன்ஜே) உடன்பாட்டை ஏற்றுக்கொண்டபிறகு சிங்கப்பூர் மேற்கொள்ளும் முதலாவது, பெரிய அளவிலான அறிவியல் ஆய்வுப் பயணம் இது என்று தேசியப் பல்கலைக்கழகமும் ஓஷன்எக்ஸ் நிறுவனமும் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளன.

பெருங்கடல்களில் கடல்துறைப் பாதுகாப்புப் பகுதிகளை நிறுவுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பிபிஎன்ஜே உடன்பாடு வழிவகுக்கிறது.

இம்மாதம் 4ஆம் தேதி ‘ஓ‌ஷன்எக்ஸ்புளோரர்’ ஆய்வுக் கப்பலின் சடங்குபூர்வ வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “யோசனைகள், கண்டுபிடிப்புகள், செயல்படுத்துதல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதாலும் பாதுகாப்பதாலும் உருவாக்கப்படும் உண்மையான மதிப்பில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார்.

மேலும், ஆசியான் மற்றும் சிறிய, வளர்ந்துவரும் தீவு நாடுகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் பிபிஎன்ஜே உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடற்பரப்பிலிருந்து 4,000 மீட்டருக்குக் கீழ் வரையிலும் உள்ள கடல்மலைத்தொடரில் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ‘ஓ‌ஷன்எக்ஸ்புளோரர்’ ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்வர். கடலடி மலைப்பகுதிகளானவை பல்லுயிர்ச்சோலைகள் என அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தேசியப் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டலக் கடல்சார் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் டான் கோ சியாங் முன்னர் தெரிவித்திருந்தார்.

தேசியப் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டலக் கடல்சார் அறிவியல் நிலையம் மற்றும் லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்களுடன், வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து, ஃபிஜி நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களும் அந்த 21 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்