தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடிவுறும் நிலையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகை: 70% மக்கள் பயன்படுத்தவில்லை

2 mins read
53429441-8dca-452b-ba22-53903a8a634c
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடல் உதவித் திட்டத்தில் பலரும் பங்கேற்று பலன் அடைந்துள்ளனர். - படம்: சாவ் பாவ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் ஒருமுறை வழங்கப்பட்ட 500 வெள்ளி நிரப்புதொகையைப் பெற்றுள்ள சிங்கப்பூரர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் அதை இன்னும் பயன்படுத்தவில்லை.

இந்த நிரப்புதொகை இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முடிவுறும்.

இந்த நிரப்புதொகை வழங்கப்படுவது குறித்து 2020ஆம் ஆண்டு அக்டோகபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை 721,000 சிங்கப்பூரர்கள் இந்த 500 வெள்ளி நிரப்புதொகையைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) அமைப்பு தெரிவித்தது; அந்த எண்ணிக்கை, உதவித் தொகையைப் பெற்றவர்களில் 28 விழுக்காடாகும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு எஸ்எஸ்ஜி பதிலளித்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு நிரப்புதொகையைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகள் கூடியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அப்படியென்றால் கூடுதலாக கிட்டத்தட்ட 30,000 பேர் தொகையை உபயோகித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட 500 வெள்ளி நிரப்புதொகையைப் பயன்படுத்துவதற்கான கெடு, டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று எஸ்எஸ்ஜி குறிப்பிட்டுள்ளது. நிரப்புதொகை செல்லுபடியாக டிசம்பர் 31ஆம் தேதிக்குள், பயனர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சிப் பாடங்கள் தொடங்கவேண்டும் என்றும் அவற்றின் கட்டணங்களைச் செலுத்துவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எஸ்எஸ்ஜி கூறியுள்ளது.

20லிருந்து 25 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகை 2020ல் வழங்கப்பட்டது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் சிங்கப்பூரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவும் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் இந்நிரப்புதொகை வழங்கப்பட்டது.

இந்த நிரப்புதொகை, 25 வயதானவுடன் ஒருவருக்கு வழங்கப்படும் 500 வெள்ளி அடிப்படை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகையயிலிருந்து மாறுபட்டது. அதோடு, 2020 டிசம்பர் 31 நிலவரப்படி 40லிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டோருக்கு மேலும் 500 வெள்ளி நிரப்புதொகை வழங்கப்பட்டது.

அத்தொகை வழங்கப்பட்டது, பணியிடைக்கால ஆதரவு நடவடிக்கைகளில் அடங்கும். அந்த இரு நிரப்புதொகைகளையும் பயன்படுத்தக் கெடு கிடையாது.

அதேபோல், சென்ற ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி 40 வயது அல்லது அதற்கும் அதிக வயதான சிங்கப்பூரர்களுக்குக் கூடுதலாக 4,000 வெள்ளி நிரப்புதொகை வழங்கப்பட்டது. முன்னதாக வழங்கப்பட்ட பணியிடைக்கால ஆதரவு நிரப்புதொகையில் எஞ்சியிருக்கக்கூடிய தொகையை அந்த 4,000 வெள்ளியுடன் சேர்ந்துப் பயன்படுத்தலாம்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகையைப் பயன்படுத்தியோரில் அதிகமானோர் தகவல் தொடர்புத் துறை, உணவு, பானத் துறை, விற்பனை, விளம்பரத் துறை ஆகியவை சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டதாக எஸ்எஸ்ஜி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்