துபாய் விமான ரத்து நீட்டிப்பு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

துபாய் விமான ரத்து நீட்டிப்பு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Oct 2026 - 6:41 pm

2 mins read

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக, துபாய்க்கான விமானச் சேவை ரத்து நடவடிக்கையை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி வரை நீட்டித்துள்ளது.

பாதுகாப்பு நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

எஸ்கியூ494 (சிங்கப்பூரிலிருந்து துபாய்), எஸ்கியூ495 (துபாயிலிருந்து சிங்கப்பூர்) ஆகிய விமானங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிவரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டது.

“சூழல் தொடர்ந்து நிலையற்றதாக இருப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்சின் மற்ற விமானச்சேவைகளும் பாதிக்கப்படக்கூடும். பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு எஸ்ஐஏ வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது,” என்று அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பயணிகள், பயன்படுத்தப்படாத விமானப் பயணச்சீட்டிற்கான முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐஏ மூலம் முன்பதிவு செய்தவர்கள் தொகையைத் திரும்பப் பெற விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்; மற்றத் தளங்களின் மூலம் முன்பதிவு செய்த பயணிகள், அவர்களின் பயண முகவர்கள் அல்லது பங்காளித்துவ விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, இந்த விமானச் சேவை பாதிப்புகள் ஆரம்பித்தன; இந்த மோதல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

விமான நிலையங்கள், எண்ணெய் நிலையங்கள் உட்பட சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகள்மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்