சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக, ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளது.
இருப்பினும் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அது அமையவில்லை.
சென்ற மாதம் (மார்ச் 2025) உற்பத்தித் துறை 5.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முன்னதாக, புளூம்பெர்க் கருத்தாய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள் அது 8.1 விழுக்காடாகப் பதிவாகும் என்று முன்னுரைத்திருந்தனர்.
உயிர்மருத்துவத் துறை தவிர்த்து இதர துறைகளில் உற்பத்தி 4.9 விழுக்காடு அதிகரித்ததாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தெரிவித்தது.
பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட மாத அடிப்படையிலான உற்பத்தி மார்ச்சில் 3.6 விழுக்காடு சரிந்ததாகவும் உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்தால் அது 0.8 விழுக்காடு அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரின் முக்கிய உற்பத்தித் துறைகளுக்கான வளர்ச்சிக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வரிவிதிப்பின் தாக்கம் இனிமேல்தான் தெரியவரும் என்பதை அவர்கள் சுட்டினர்.
வரிவிதிப்புகள் 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேளையில் பேரப் பேச்சுகள் இடம்பெறுகின்றன. அதன் பிறகு அவற்றில் சில நடப்புக்கு வந்தாலும்கூட நிறுவனங்களின் மூலதனச் செலவு, முதலீடுகள், ஊழியர் சேர்க்கை போன்ற அம்சங்களை அது பாதிக்கும் என்று அவர்கள் கூறினர்.
இதுவரை உற்பத்தித் துறை ஏற்றம் கண்டாலும், இந்த ஆண்டின் பிற்பாதியில் அது நலிவடையும் வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க வரிவிதிப்புகளால் ஏற்பட்டுள்ள கணிக்க முடியாத சூழலும் நிச்சயமற்றதன்மையும் சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து.
மார்ச் மாதம், மின்னணுத் துறையில் ஆண்டு அடிப்படையிலான உற்பத்தி 8.9 விழுக்காடு அதிகரித்தது.
போக்குவரத்துப் பொறியியல் துறை உற்பத்தி 20.2 விழுக்காடு ஏற்றம் கண்டது.
விண்வெளிப் பொறியியல் துறை 30.9 விழுக்காடு விரிவடைந்தது.
இருப்பினும் துல்லியப் பொறியியல், வேதிப்பொருள்கள் போன்ற துறைகளில் உற்பத்தி சரிந்தது.