பாவனைப் பயிற்சியில் பயன்படுத்தும் போலி வெடிகுண்டை அகற்ற மறந்ததை அங் மோ கியோ தொழிற்பேட்டை 2ல் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்த துரேந்திரன் விக்னேஷ் வெங்கட்ராமன் வியாழக்கிழமையன்று (டிசம்பர்12) ஒப்புக்கொண்டார்.
49 வயதான அவர், தன்மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுக்களான சரியான காரணமின்றி பணியமர்த்தப்பட்ட இடத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வராமல் இருத்தல், வருகைப் பதிவேட்டில் தவறான பதிவுகளை உள்ளீடுசெய்து தனது உயரதிகாரியை ஏமாற்றியது ஆகிய குற்றங்களைப் புரிந்ததற்காகவும் அவர் வருந்தினார்.
இக்குற்றங்களுக்காக அவருக்கும் டிசம்பர் 17ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அப்போது, அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டான காவல்துறையிடம் பொய் கூறியதையும் நீதிபதி கருத்தில் எடுத்துகொண்டு அவருக்குத் தண்டனை விதிப்பார் எனக் கூறப்பட்டது.
இச்சம்பவம் இவ்வாண்டு ஜனவரி மாதம் நடந்தது.
பாவனைப் பயிற்சிக்குழு தவறுதலாக விட்டுச்சென்ற போலி வெடிகுண்டை அன்று பணியில் இருந்த துரேந்திரன் அகற்ற மறந்தார். அக்குழு பாவனைப் பயிற்சிக்காக அவ்விடத்திற்கு வந்தபோது துரேந்திரன் பணியிடத்தில் இல்லை. அவருக்குப் போலி வெடிகுண்டை அகற்ற அக்குழு பலமுறை அறிவுறுத்தியபோதும் அவர் அதை மறந்துவிட்டு பணிமுடிந்து வீடு திரும்பினார்.
அதனால், அவருக்குப் பிறகு பணிக்குவந்த பாதுகாப்பு அதிகாரி அந்த போலி வெடிகுண்டை உண்மையானது என எண்ணி காவல்துறைக்குப் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் அது போலி எனக் கண்டறிந்தன.
இதுகுறித்து துரேந்திரனிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாகக் கூறப்பட்டது.

