சிங்கப்பூரில் செயல்படும் மின்னிலக்கச் சொத்து வர்த்தகத் தரகு நிறுவனமான ஃபேல்கன் எக்ஸ், அதன் உலகளாவிய ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதன் விவரங்களை அடையாளம் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைக் தலைமையகமாகக் கொண்ட அந்நிறுவனம் விற்பனை, நிதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றிய மூத்த மேலாளர்கள் உட்பட, சிங்கப்பூரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்துள்ளது.
மின்னிலக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்நிறுவனம் அதன் அனைத்துக் கிளைகளிலும் ஆட்குறைப்புச் செய்யத் தயாராகி வருகிறது.
சிங்கப்பூரில் நிறுவனம் அதன் உத்திகளை மாற்றியமைக்கிறது. உரிமம் தேவைப்படாத வகையில் இங்கு மின்னிலக்க நாணயங்கள்மீது அதன் முழு கவனத்தைச் செலுத்த நிறுவனம் வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. எனவே சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் அது பெற்றுள்ள வர்த்தக உரிமைத்தை மீட்டுக்கொள்ள விண்ணப்பித்துள்ளது.
உலகம் முழுதும் ஏறத்தாழ 350 ஊழியர்கள் ஃபேல்கன் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அந்நிறுவனம் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, நியூயார்க் ஆகிய நகரங்களோடு லண்டன், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவற்றில் ஏழு அலுவலகங்களை நடத்திவருவதாக அதன் இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக் காலமாகப் பல முன்னணி மின்னிலக்க நாணய நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துவருகின்றன. கிரிப்டோ டாட்காம், காய்ன்பேஸ் குளோபல், ஜெமினி ஸ்பேஸ் ஸ்டேஷன் போன்றவற்றுடன் ஃபேல்கன் எக்ஸ் நிறுவனமும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மின்னிலக்க நாணய வர்த்தகத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தி நிறுவனங்களின் இழப்புகளுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.


