துன்புறுத்தலால் மாண்ட மியன்மார் பணிப்பெண் வழக்கு: ‘எலும்பைத் தோல் போர்த்தியது போன்ற’ கைகால்கள்

காவல்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு வேலை செய்த மியன்மார் பணிப்பெண் பியாங் ங்காய் டான் உயிரிழந்தபோது மிகவும் மெலிந்துபோய் 24 கிலோ மட்டுமே இருந்தார்.

திருவாட்டி பியாங் இறந்துவிட்டதாக அவரது முதலாளியின் இல்லத்தில் உறுதிப்படுத்திய டாக்டர் கிரேஸ் குவான், பணிப்பெண்ணின் முதலாளியான காவல்துறை அதிகாரி கெவின் செல்வத்திற்கு எதிரான வழக்கு விசாரணையில் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தார்.

திருவாட்டி பியாங்கை காயப்படுத்தியதாகவும், பட்டினி போட்டு காயப்படுத்த துணை புரிந்ததாகவும், காவல்துறை அதிகாரியிடம் பொய் சொன்னதாகவும், தனது வீட்டிலிருந்த காணொளி கண்காணிப்புக் கருவிகளை அகற்றியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 44 வயது செல்வம் மறுக்கிறார்.

செல்வத்தின் முன்னாள் மனைவியான 43 வயது காயத்ரி முருகையன் அழைத்ததன்பேரில் டாக்டர் குவான் 2016 ஜூலை 26ஆம் தேதி செல்வத்தின் பீ‌ஷான் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

செல்வமும் காயத்ரியும் 2020ல் விவாகரத்து செய்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு வயதிலும் நான்கு வயதிலும் இரு பிள்ளைகள் இருந்தனர்.

திருவாட்டி பியாங் உயிரிழக்கும்வரை துன்புறுத்தியதற்காக காயத்ரிக்கு 2021 ஜூன் மாதம் 30 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காயத்ரியுடன் சேர்ந்து பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய அவரது 64 வயது தாயார் பிரேமா எஸ் நாராயணசாமிக்கு ஜனவரி மாதம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பீ‌ஷான் வீட்டிலிருந்த ஆதாரங்களை மறைக்குமாறு செல்வத்தைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக பிரேமாவுக்கு ஜூன் மாதம் மேலும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டாக்டர் குவான் காலை 11 மணிக்குச் சற்றுமுன்னர் பீ‌ஷான் வீட்டை அடைந்தார். பணிப்பெண் பியாங் வரவேற்பறையில் வாய் பிளந்தபடி கிடப்பதை அவர் கண்டார். நாடித்துடிப்பு இல்லை. அவரது உடல் குளிர்ந்து போயிருந்தது.

கண்களும் கன்னங்களும் குழிவிழுந்து போயிருந்தன. கைகால்களில் எலும்பைத் தோல் போர்த்தியதுபோல் இருந்ததாக டாக்டர் குவான் வர்ணித்தார்.

பணிப்பெண்ணின் வலி உணர்வை டாக்டர் குவான் சோதித்துப் பார்த்தபோது எந்த அசைவும் இல்லாததால், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

ஆனால் காயத்ரியும் பிரேமாவும், “இல்லை டாக்டர், இருக்க முடியாது. நீங்கள் வருவதற்குச் சற்றுமுன்தான் அசைந்தாள்,” என்று சொன்னதாக டாக்டர் குவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஏதாவது செய்ய முடியுமா என்று தாயும் மகளும் கேட்டதாக டாக்டர் குவான் கூறினார். அவர்கள் பணிப்பெண்ணை உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டனரா அல்லது இறப்புச் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டனரா எனத் தெரியவில்லை என்றார் டாக்டர் குவான்.

தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய டாக்டர் குவான், காவல்துறையினரை அழைக்கச் சொன்னார். திருவாட்டி பியாங்கின் உடலில் காயங்களும் தழும்புகளும் இருப்பதையும் அவர் கவனித்தார்.

ஆனால், காயத்ரியும் பிரேமாவும் அவசர மருத்துவ வாகனத்தை அழைக்கச் சொன்னார்கள். அத்துடன், பணிப்பெண்ணை அடிக்கவில்லை என்றும் காயத்ரி கூறினார். அது உண்மையாக இருந்தால், காவல்துறையை அழைக்கத் தயங்க வேண்டியதில்லை என்று டாக்டர் குவான் அவரிடம் சொன்னார். முடிவில் டாக்டர் குவானே காவல்துறையினரை அழைத்தார்.

திருவாட்டி பியாங் இறப்பதற்குமுன் 2016 ஜனவரியிலும் அதே ஆண்டு மே மாதமும் டாக்டர் குவான் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.

ஜனவரியில் திருவாட்டி பியாங்குக்கு சளியும் வறட்டு இருமலும் இருந்தது. மே மாதம் அவரது கண்களைச் சுற்றிலும் கன்னத்திலும் காயங்கள் இருந்தன. கால்களும் வீங்கிப் போயிருந்தன.

திருவாட்டி பியாங் தன்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றும், அவர் எப்போதும் விழுந்து அடிபடுவதாக காயத்ரி சொன்னதாகவும் டாக்டர் குவான் நீதிமன்றத்தில் கூறினார். கால் வீக்கத்திற்குப் பரிசோதனை செய்ய விரும்பியபோது, வேண்டாமென்று காயத்ரி மறுத்துவிட்டார்.

வழக்கு விசாரணை திங்கட்கிழமை தொடரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!