அறிவிக்கப்படாத குற்றத்துக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு வீடு திரும்பிய ஆடவர், அவரது இரு பதின்ம வயதுப் பிள்ளைகளையும் தாக்கினார்.
பிள்ளைகளில் ஒருவரான அவரது மகள், ‘கேபாட்’ எனப்படும் மின்சிகரெட் பிடித்ததாக அவர் சந்தேகப்பட்டதால் அவ்வாறு நடந்துகொண்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூச்சு விடுவதற்கே தடுமாறும் வரையில் அவ்விரு பிள்ளைகளின் கழுத்துகளும் நெரிக்கப்பட்டன.
அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டதால், குடும்பம் வாழ்ந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற வேண்டிய அவசர உத்தரவு அவருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தில் ஒருவர் அதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆகவே, வீடமைப்பு வளர்ச்சிக் கழக கீழ்த்தளங்களில் அவர் படுத்து உறங்கினார். இருப்பினும் வெளியேற்ற உத்தரவை மீறி, அவர் வீட்டுக்கு வெளியே சச்சரவு ஏற்படுத்தினார்.
அவரது குற்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) அந்த 57 வயது ஆடவருக்கு 14 வாரங்கள் சிறைத் தண்டனையும் $1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை மீறியதற்காக மேலும் 17 நாள்கள் அவர் சிறையில் இருக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மாதர் சட்டப்படி வீட்டுக்குள் நுழைவதற்கான அவசரத் தடையை மீறிய குற்றத்தையும், தாக்குதல் நடத்திய இரு குற்றங்களையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
மனைவி, பிள்ளைகளின் அடையாளம் தெரியவரும் என்பதால் மாதர் சட்டப்படி, அவரது பெயரை வெளியிட அனுமதியில்லை.
ஏற்கெனவே செய்த குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த அவர், நன்னடத்தை போன்ற காரணங்களால் தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் வெளியில் வந்ததும் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
