இன்று தந்தையர் தினம். தந்தையர் தங்கள் பிள்ளைகளுடன் இந்நாளைக் கொண்டாடி மகிழும் வேளையில், பிள்ளைகள் பக்கத்தில் தற்போது இருக்க முடியாமல் போனாலும் பதின்ம வயதில் பிள்ளைகளைக் கொண்ட இவருக்குத் தந்தையர் தினம் கொண்டாட சிறை ஒரு தடையன்று.
ஆரவ் 45 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல் புரிந்ததால் தற்போது சிறையில் இருக்கும் இவர் ஒற்றைப்பெற்றோரும் கூட.
தனியொருவனாக இருந்தாலும் இளையர்களான மகள், மகன் இருவருக்கும் தாய், தந்தை, நண்பன் என யாதுமாக இருக்கும் ஆரவ்வின் வாழ்க்கைப் பயணம் இடர் நிறைந்தது.
புரிந்த குற்றச்செயல்களுக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவர்.
ஆனால், அதைக் காட்டிலும் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய தண்டனையாக இவர் கருதுவது, தன் குழந்தைகளிடமிருந்து பிரிய நேர்ந்ததைத்தான்.
தொலைவில் இருந்தாலும் உணர்வால் இணைந்துள்ளார்
“முதல் முறை குற்றச்செயல் புரிந்தபோது என் மகள் கைக்குழந்தை. அப்போது தண்டனை பெற்று என் பிள்ளையைவிட்டுச் சிறிது காலம் பிரிய நேரிட்டது. அப்போது என் பிள்ளையின் முகத்தைப் பார்த்தபோது, அவர்களுக்காகவே வாழ விரும்பினேன். அதனால்தான் நான் அவர்களுக்காகவே வாழ்ந்தும் வந்தேன்,” என்றார் ஆரவ்.
ஒற்றை பெற்றோராகத் தாம் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிச் சிந்தித்த ஆரவ், “இதனால் விளைந்த மன அழுத்தம், மேலும் வயதான பெற்றோருக்கு ஒரு சுமையாக இருப்பதாக உணர்ந்ததன் காரணமாக, போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயலில் ஈடுபட்டு, தற்போது மீண்டும் சிறைக்கு வந்துவிட்டேன்,” என்றார்.
பிள்ளைகளுக்கு நினைவுதெரியத் தொடங்கியதிலிருந்து இத்தனை ஆண்டுகாலம் தந்தையர் தினக் கொண்டாட்டம் நள்ளிரவு 12 மணிக்கு ‘கேக்’, பரிசுகளுடன் தொடங்கும் என்று சொன்ன ஆரவ், ஆனால் இந்த ஆண்டு முதன்முறையாக அந்தத் தருணம் அமையவில்லை என்று வருத்தப்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“என் பிள்ளைகள ஒவ்வோர் ஆண்டும் விதவிதமான கேக் தருவார்கள். சில நேரம் அந்தச் சுவை எனக்குப் பிடிக்காது.
“எனினும், பிள்ளைகளின்ள் மனம் வருந்தக்கூடாது என்பதற்காக மகிழ்ச்சியுடன் அவர்கள் அளிக்கும் எல்லாப் பரிசுகளையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த ஆண்டு நான் இல்லை. என்னைவிட என் பிள்ளைகள் மிகவும் கவலைப்பட்டிருப்பார்கள்,” என்றும் இவர் வருத்தப்பட்டார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
“என் பக்கம் தவறு இருந்தபோதிலும், என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகவே நிற்கிறார்கள். என் குழந்தைகள் ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுதுகின்றனர். குறிப்பாக, தந்தையர் தினத்தை முன்னிட்டு என் மகள் எனக்கு அனுப்பிய நல்வாழ்த்துக் காணொளி, அப்பா-மகள் பாசத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்ற நற்செய்தியை எனக்குத் தந்துள்ளது,” என்றார்.
சிறையில் இருந்தாலும் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுத ஆரவ்விற்கு வாய்ப்புண்டு. அதேபோல, பிள்ளைகள் அனுப்பும் கடிதங்களும் இவர் கைகளுக்கு வாரம் தவறாமல் வந்து சேர்ந்துவிடுகின்றன.
“வாரத்திற்குக் குறைந்தது மூன்று கடிதங்கள் வருகின்றன. இந்தக் கடிதங்கள் என் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. விரைவில் வந்து தங்களுடன் சேரும்படி அவர்கள் அனுப்பும் மடல்கள் நான் சிறைக்குள்ளும் பாதுகாத்து வரும் பொக்கிஷம்,” என்றார் ஆரவ்.
குழந்தைகளுடனான உறவு அன்பு, நம்பிக்கை, இருதரப்பு மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.
அப்பா சிறையில் இருக்கிறார், அவரை வருத்தப்படுத்தக்கூடாது என்று எண்ணி, தம் பிள்ளைகள் பலமுறை அவர்கள் கடந்துவரும் சூழலைச் சொல்லாமல் இருக்க முடிவெடுத்ததுண்டு என்று ஆரவ் கூறினார்.
“ஆனாலும், நான் அனுப்பும் எல்லா கடிதத்திலும் சொல்வேன். ‘அப்பாவிடம் சொன்னால்தான் என்னால் ஆலோசனை வழங்க இயலும். நீ கவலை இல்லாமல் சிறப்பாக இருப்பதை உணர்வாய்’ என்று சொல்லிப் பிள்ளைகளின் கவலைகளை அறிந்துகொள்வேன்,” என்றும் அவர் சொன்னார்.
சிறையில் மலரும் மறுவாழ்வு
சிங்கப்பூர்ச் சிறைத்துறையின் மறுவாழ்வுத் திட்டங்கள், வாழ்க்கைத்தொழில் குறித்த புதிய கண்ணோட்டத்தை ஆரவ்விற்கு அளித்துள்ளன.
அதன்வழி புதிய திறன்களைக் கற்றுக்கொண்டதாகவும் சிறைவாசம் முடிந்ததும் அத்திறன்களைக் கொண்டு மேலும் சிறப்பான வாழ்க்கையை வாழ் வாய்ப்பு கிட்டும் என மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இவர் கூறுகிறார்.
“கடுமையாக உழைக்க ஒருபோதும் நான் தயங்குவதில்லை. எனவே, இங்கு இருக்கும்போது பயிற்சிப் பட்டறைகள் வாயிலாகப் பெற்றுவரும் திறன்களைக் கொண்டு நல்ல வேலை செய்து, என் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக் கைகொடுப்பேன்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் ஆரவ்.
நம்பிக்கை பெருகினாலும், சிறையில் யோசிக்க நிறைய நேரம் இருப்பதால் செய்த தவற்றை நினைக்கும்போது உள்ளத்தில் ஏற்படும் வலியை இவரால் வார்த்தையால் விவரிக்க இயலவில்லை.
“இங்கு சிந்திக்க கிடைக்கும் இந்த நேரம் வாழ்க்கையில் இனி இது போன்ற ஒரு சூழலில் நான் சிக்கித் தவிக்கக்கூடாது என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது,” என்ற இவரின் எண்ணங்கள், தந்தையர் தினமான இன்று முழுமையாக அவரின் பிள்ளைகள்மீது திரும்பியது.
தாயாகிய சேய்
தமது தந்தையர் தின உறுதிமொழியைப் பகிர்ந்துகொண்டார் ஆரவ்.
“பிள்ளைகளின் வாழ்வில் இன்னும் அதிகமாக ஈடுபட, இன்னும் சிறப்பாக அவர்களுக்கு உள்ளார்ந்த ஆதரவை, ஊக்கத்தை தர விரும்புகிறேன்.
“என் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப் போகிறேன். நான் அவர்களுடன் செலவிடாத நேரத்தையும் ஈடுகட்ட வேண்டும்,” என்று உறுதிகூறினார் ஆரவ்.
மகனை வளர்த்துவிடலாம், ஆனால் ஒற்றைப் பெற்றோராக மகளை வளர்ப்பது சவாலும் அதேநேரம் சுகமும்கூட என்ற ஆரவ், “மகள் சந்திக்கும் குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்போது சில நேரங்களில் என்னை வியப்புடன் பார்க்கும் என் மகள், எனக்கு ஒரு தாயும்கூட,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“நான் சிறையில் இருக்கலாம். ஆனால், வெளியே உள்ள சுற்றத்தார், ‘நீங்கள் ஒற்றை ஆளாக உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என்று சொல்லும்போது, நானும் ஏதோ ஒரு வகையில் பெருமையாகவே உணர்கிறேன்,” என்று நிறைவுசெய்தார் ஆரவ்.