ஈகைக் காலத்தைக் கொண்டாட்டம், பகிர்தல், விருந்து என்று பலர் பலவாறாகக் கடைப்பிடித்தாலும் முஸ்லிம் இளையர்கள் பலருக்கும் சமூகச் சேவையில் தங்களைத் திளைக்கச் செய்வதே உண்மையான ரமலான் காலமாகத் திகழ்ந்தது. தீவெங்கிலும் புனித ரமலான் காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக அருளும் பரிவும் மிளிர்ந்தன. இந்த நற்காலத்தில் வறியோருக்கும் விழாக்கால உணர்வை வழங்க பல்வேறு தொண்டூழியப் பணிகளில் இளையர்கள் ஈடுபட்டனர்.
அவ்வகையில், எளியோர் தொடங்கி வெளிநாட்டு ஊழியர்வரை பல்வேறு பிரிவினருடன் இணைந்து நோன்புக் காலத்தை அவர்கள் கொண்டாடினர்.
குறிப்பாக, எளியோரின் சமையலறைக்குச் சுவை சேர்த்திடும் வகையில் நடத்தப்பட்ட ‘ரமடான்’ (Ramadawn) எனும் முயற்சியின்வழி, 1,000 குடும்பங்களுக்கு 1,000 அன்பளிப்புப் பைகள் சென்றடைந்தன.
‘மெஸ்ரா’ எனப்படும் மக்கள் கழக மலாய் நற்பணிப் பேரவையின் இளையர் பிரிவு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி, உயர்கல்விக் கழகங்கள், மலாய்/இஸ்லாமிய அமைப்புகள், மலாய் நற்பணிச் செயற்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளையர்களைத் திரட்டும் வகையில் முதன்முதலாகக் களம் கண்ட ஒரு முயற்சி.
“உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் சில மணிநேரம் மட்டுமே உறங்கினோம். ஆனாலும் நாங்கள் சிறிதும் சோர்வடையவில்லை,’’ என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு ஹாஜாமுகைதீன் ஷஃபீக் அகமது, 25.
இவர் தலைசிறந்த தொண்டூழியத்திற்காக மதிப்புமிகு தேசிய இளஞ்சாதனையாளர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முஸ்லிம் இளையர்கள் உட்பட ஏறத்தாழ 100 இளையர்கள் ஒன்றுகூடி காசிம் பள்ளிவாசலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
‘மெஸ்ரா’ நற்பணிப் பேரவையில் இருக்கும் தம் நண்பர் அர்ஷத் விடுத்த அழைப்பை ஏற்று, இந்தத் தொண்டூழியத்தில் உற்சாகமாக இணைந்தார் திரு ஷஃபீக்.
தொடர்புடைய செய்திகள்
‘‘இளையர்களாகக் கூடி 1,000 குடும்பங்களுக்கான அன்பளிப்புப் பைகளைத் தயார்செய்தோம். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் அம்முயற்சிக்கு ஆதரவளித்தனர்.
“நண்பர்களும் தொண்டூழியர்களும் இணைந்து அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, காப்பித்தூள் உள்ளிட்ட சமையல் பொருள்களால் அன்பளிப்புப் பைகளை நிரப்பினோம்,” என்று திரு ஷஃபீக் விளக்கினார்.
நண்பர்களாகவும் சமூகமாகவும் இணைந்து செய்ததால் இந்த அனுபவம் அர்த்தமிக்கதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
‘‘தேவையுள்ளோர் வாழ்வில் ஒளியேற்றுவதே ஈகைத் திருநாளின் உன்னத நோக்கம். இளையர்கள் தாங்களாகவே முன்வந்து சமூகத்திற்குப் பங்காற்றுவது நம்பிக்கையை அள்ளித் தூவுகிறது,’’ என்றும் ஷஃபீக் சொன்னார்.

