உள்துறை அமைச்சு மேற்கொண்ட சமூக ஆய்வில் வெளியான தகவல் 

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களிடம் குறைவான விழிப்புணர்வு

2 mins read
04da9d0b-1e58-4a4f-8fb5-6da13237ee2a
மதிய, இரவு உணவருந்தும் நேரங்களில் சில மணிநேரம் அந்தப் பெட்டியும், காரும் பொது இடங்களில் காணப்பட்டன. - படம்: உள்துறை அமைச்சு

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த விழிப்புநிலை மக்கள் மத்தியில் உள்ளதா... அவசரநிலை சார்ந்த அத்தகைய தருணங்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் எந்த அளவுக்குத் தயார்நிலையில் உள்ளனர் என்பதைக் கண்டறிய சமூக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜூன் 10, 13ம் தேதிகளில் உள்துறை அமைச்சு மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவில் பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வு குறைவாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது. 

அந்தச் சமூக ஆய்வின் ஓர் அங்கமாக, நடத்தப்பட்ட பாவனை நடவடிக்கையின்போது ‘நமது தெம்பனிஸ் நடுவம்’ பீஷான் சமூக மன்றம் ஆகிய இடங்களில் மர்மப் பொருள்கள் கொண்ட கறுப்பு நிறப் பெட்டியும், பதிவு எண் மறைக்கப்பட்ட கறுப்பு நிற காரும் பயன்படுத்தப்பட்டன.

அப்போது அப்பகுதியைக் கடந்துசென்ற ஏறத்தாழ 2,500 பேரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தென்பட்ட அந்தப் பொருள்களைப் பார்த்துச் சென்றவர்கள் 500க்கும் குறைவானோரே.

அதிலும் அது போன்ற மர்மப் பொருளைப் பொது இடத்தில் கண்டதன் தொடர்பில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று முன்வந்தவர்கள் அவர்களிலும் குறைவானவர்கள். அந்த எண்ணிக்கை வெறும் 26 மட்டுமே. 

பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தால் மக்கள் அதனை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதைப் பரிசோதிக்கும் இலக்குடன் நடத்தப்பட்ட அந்த நிகழ்வின்போது மதிய, இரவு உணவருந்தும் நேரங்களில் சில மணிநேரம் அந்தப் பெட்டியும், காரும் பொது இடங்களில் காணப்பட்டன.

இதற்கிடையே, சமூக ஆய்வில் வெளியான முடிவுகள் குறித்து கருத்துரைத்த தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், “இந்த முடிவுகளை எப்படி விளக்குவது?’’ என்றார். 

எதார்த்தம் என்னவென்றால் சிங்கப்பூர் பாதுகாப்பான நகரம். ஆண்டாண்டு காலமாக அப்படித்தான் இருந்துவந்துள்ளது. எனவே அச்சுறுத்தல் அல்லது குற்றம் சார்ந்த சிந்தனைகளுடன் இருப்போர் வெகுசிலர்தான்.

‘‘நாம் கொண்டிருக்கும் பாதுகாப்பின் அளவு நல்லது. ஆயினும் அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விழையும்போது சவால்கள் அதிகம்.

‘‘ஏதேனும் ஒரு சூழலில் அத்தகைய அச்சுறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்,’’ என்றார் அவர்.

முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகளில் மர்மப் பொருள்கள் இருந்த இடங்களைக் கடந்துசென்ற 2,530 பேரில் 438 பேர் மட்டுமே சந்தேகத்திற்கிடமான வகையில் அங்குக் கிடந்த அந்தப் பொருள்களைப் பார்த்தனர்.

அந்தச் சமூக ஆய்வின் முடிவு 2024ஆம் ஆண்டின் ‘எஸ்ஜி செக்யூர்’ கண்ணோட்ட ஆய்வின் முடிவுகளிலிருந்து மாறுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டது உள்துறை அமைச்சு.

அப்போதைய ஆய்வில் 77 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் தாங்கள் பொதுவாகவே முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருப்பதாகவும், பொது இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் பொருள்கள் காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவதில் கவனமுடையவர்களாகத் திகழ்வதாகவும் சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்தது அமைச்சு.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த உள்துறை, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், ‘‘பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கான பொதுமக்களின் விழிப்புணர்வையும், அவர்கள் கொண்டிருக்கவேண்டிய தயார்நிலையையும் அதிகரித்திட நாம் மேலும் செய்யவேண்டியுள்ளது என்பதை முடிவுகள் காட்டுகின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்