சிங்கப்பூரில் இயங்கும் ஈராயிரம் உள்ளூர் நிறுவனங்களுக்குச் செயற்கைத் தொழில்நுட்பத்தைப் (ஏஐ) பயன்படுத்த உதவி கிடைக்கவிருக்கிறது. அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே மின்னிலக்க ஆற்றல்கள் சிலவற்றை வளர்த்துக்கொண்டுள்ளன.
அவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத் திட்டமொன்று நிதியுதவியையும் நிபுணத்துவ ஆதரவையும் வழங்குகிறது.
மின்னிலக்கத் தலைவர்கள் திட்டம் எனும் அதனைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2021ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் மூலம் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.
திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் புதிய வர்த்தக வழிமுறைகளை உருவாக்கவும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவும் மின்னிலக்க ஆற்றல்களை மெருகேற்றிக் கொள்ளலாம்.
திட்டத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறமுடியும். செயற்கை நுண்ணிறவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மின்னிலக்கத் திறனாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு நிதியுதவியையும் எதிர்பார்க்கலாம். ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக வேலைக்கு ஆள்களை எடுப்பதற்கும் ஆகும் செலவில் 50 விழுக்காட்டைத் தருவதாக ஆணையம் குறிப்பிட்டது.
திட்டம் நல்ல பலன்களைத் தந்திருப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார். திட்டத்தை விரிவுபடுத்தும் நம்பிக்கையை அது ஆணையத்திற்குத் தந்திருப்பதாகத் திருமதி டியோ சொன்னார்.
வெஸ்ட் கோஸ்ட்டில் உள்ள ஐஹப் சொல்யூஷன்ஸ் கிடங்கிற்கு வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டபோது அவர் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டு திட்டத்தில் சேர்ந்த அந்தத் தளவாட நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஆணையத்தின் நிதியுதவியையும் பெற்றது.