சாங்கி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கியபோது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 45 வயது ரியுவாங்தியங் மிஸ் வரிண்டா என்ற பெண் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குடிநுழைவு அனுமதி பெற தன்னை வழிநடத்திய குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் மற்றொரு அதிகாரியின் வலக்கையைக் கீறியதாகவும் மிஸ் வரிண்டாமீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த மாது ஒப்புக்கொண்டதால் அவருக்கு புதன்கிழமையன்று (ஜனவரி 8) $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.
குடிநுழைவுச் சோதனையின்போது முன்னுக்குப்பின் முரணாக மிஸ் வரிண்டா பதிலளித்ததால் மேலும் பல சோதனைகள் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அதற்கு இணங்க மறுத்த அவர், அதிகாரியின் கையில் இருந்த கடவுச்சீட்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியதாகவும் இதனால், அந்த அதிகாரியின் வலக்கையில் சிறு கீறல்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அந்த மாதை ஒரு தனி அறையில் தடுத்துவைத்த அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அன்றைய நாளே அவர் கைது செய்யப்பட்டார்.