போட் கீ வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) பின்னிரவு தீ மூண்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 80 பேர் வெளியேற்றப்பட்டனர். தீ மூண்டதற்கும் சமையல் பொருள்களுக்கும் தொடர்பிருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தது.
செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் தீ குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைக் கொண்டு தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலிருந்த கடைப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். புகையை நுகர்ந்ததாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குப் போக மறுத்தார்.
தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்வதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

