ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை சுவா சூ காங்கில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து, ஏறத்தாழ 80 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதே நாளில் ‘சியாவ்ஹோங்ஷு’ தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் குடியிருப்பாளர்கள் தரைத்தளத்தில் கூடியிருப்பதையும் காண முடிகிறது.
மின்தூக்கிகள் செயல்படாததால், குடியிருப்பாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வெளியேறியதாகப் பயனர் ஒருவர் அக்காணொளியில் குறிப்பிட்டார்.
இரவு முழுவதும் சாதனங்களை மின்னூட்டு செய்யும்போது கவனமாக இருக்குமாறும் குடியிருப்பாளர்களுக்கு அந்தப் பயனர் அறிவுறுத்தினார்.
காலை 8.15 மணியளவில் எச்சரிக்கை ஒலி கேட்டதாகவும் சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் வந்ததாகவும் அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்தார்.
“நாங்கள் கீழே வந்தபோது, சன்னல்களிலிருந்து மிக அடர்த்தியான கரும்புகை வெளியேறுவதைப் பார்த்தோம். காலை 8.30 மணியளவில், யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று சோதிக்கத் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போதைக்கு, புகை குறைந்திருந்ததால், மற்ற புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர், என்றார் அவர்”
காலை 8.05 மணியளவில் 60 சுவா சூ காங் அவென்யூ 5ல் தீ விபத்து ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் மூண்ட இந்தத் தீ அணைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்த இரண்டு குடியிருப்பாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வேறு எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

