உட்லண்ட்ஸ் இவான்ஜிலிக்கல் ஃப்ரீ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை (செப்டம்பர் 28) தீப்பற்றியதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்று அது கூறியது.
தேவாலயத்தின் மண்டபத்தில் உள்ள ஒலிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாற்றால் நெருப்பு மூண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிகாலை 3.45 மணியளவில் எண் 1, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 83ல் தீச்சம்பவம் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தேவாலய மண்டபத்தின் நான்காம் தளத்தில் ஒலிக் கட்டமைப்பில் தீ மூண்டதாகவும் நீரைப் பாய்ச்சித் தீயணைப்பாளர்கள் அதனைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி மரியம் ஜாஃபர், தீச்சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் காலை மணி 10.41க்குப் பதிவிட்டிருந்தார்.
தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதத்தைத் தணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
தேவாலயத்தின் ஒரு சன்னலில் வந்த புகையைப் பார்த்த குடியிருப்பாளர்கள் அதுபற்றித் தெரிவித்ததாகத் திருவாட்டி மரியம் ஜாஃபர் சொன்னார்.
தேவாலயச் சேவைகள் இணையத்திற்கு மாற்றிவிடப்பட்டுள்ளன என்று தேவாலயத்தின் தலைவர் லாவ் டி டெங் கூறியதாகத் திருவாட்டி மரியம் தெரிவித்தார்.