புக்கிட் பாஞ்சாங் வீவக வீட்டில் தீ: மூவர் மருத்துவமனையில், பலர் வெளியேற்றம்

புக்கிட் பாஞ்சாங் வீவக வீட்டில் தீ: மூவர் மருத்துவமனையில், பலர் வெளியேற்றம்

படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்

04 Oct 2026 - 4:15 pm

2 mins read

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக மாடி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தீ விபத்து ஏற்பட்டதில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அந்த கட்டடத்தில் இருந்து 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அன்றைய தினம் காலை 9.35மணியளவில் சேகார் ரோடு புளோக் 479 ஒன்பதாம் மாடி வீட்டில் தீ ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை (எஸ்சிடிஎஃப்) அதன் பேஸ்புக்கில் பதிவிட்டது.

சம்பவம் நடந்த வீட்டை அடைந்ததும் படுக்கை அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது எனவும் நீர் குழாயைக் கொண்டு அது அணைக்கப்பட்டதாகவும் எஸ்சிடிஎஃப் கூறியது.

அந்த வீட்டில் இருந்த ஒருவர், தீயணைப்புப் படை வருவதற்கு முன்பாகவே வெளியேறிவிட்டார். அந்த நபரும் அண்டை வீட்டைச் சேர்ந்த இருவரும் கரும்புகையைச் சுவாசித்தமைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று காவல்துறையும் எஸ்சிடிஎஃப் அமைப்பும் கூட்டாகத் தெரிவித்தன.

ஆரம்பகட்ட விசாரணையில் படுக்கையறையில் இருந்த மின்கருவியில் தீ மூண்டதாக அறியப்படுகிறது.

பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மின்சாதனங்களை ஒரே இணைப்பில் மின்சாரம் பெறும் வகையில் பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்சிடிஎஃப் கேட்டுக்கொண்டது.

பாதுகாப்பு காரணங்களால் சேஃப்டி மார்க் (Safety Mark) முத்திரையைக் கொண்ட மின்சாதனங்களை மட்டும் பயன்படுத்தும்படியும் அவற்றை பயன்படுத்தாதபோது மின் இணைப்பை அடைத்துவைத்துக்கொள்ளவும் அது அறிவுரை வழங்கியது.

இவ்வாண்டு பிப்ரவரி 11ல் வெளியிடப்பட்ட எஸ்சிடிஎஃப் ஆண்டு அறிக்கையில் குடியிருப்புகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 8.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டின. 2024 முதல் 2025 வரை தீ விபத்தினால் உதவி கேட்டு வந்த அவசர அழைப்புகள் 968லிருந்து 1,051 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றில் முக்கிய இரு காரணங்களாக சமையலறையில் கவனிப்பின்றி விடப்பட்டுச் சென்ற தீ விபத்துகளும், வீடுகளில் மின் இயந்திரங்களினால் ஏற்பட்ட தீ விபத்துகளும் அடங்கும்.

2025ஆம் ஆண்டில் நடந்த மொத்த தீ விபத்துகளில் 94 காயம் ஏற்பட்ட சம்பவங்களும் ஆறு மரணங்களும் நிகழ்ந்துள்ளதை அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
தீதீவிபத்துசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகுடிமைத் தற்காப்புப் படைகுடிமைத் தற்காப்புகுடியிருப்புகுடியிருப்பாளர்குடியிருப்புப் பேட்டைதீயணைப்புகாவல்துறைஅறிக்கைமருத்துவமனைகாயம்சுவாசக் கோளாறுமூச்சுத்திணறல்