தெங்கா புல்தரையில் தீயணைப்பு வாகனச் சக்கரத் தடங்கள்

தெங்கா புல்தரையில் தீயணைப்பு வாகனச் சக்கரத் தடங்கள்

1 mins read
895b0176-0ffe-473a-b468-a3b06dbd257d
சம்பவம் பதிவான படங்கள். - படங்கள்: Kerwin Wan / டிக்டாக்

தெங்கா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புப் பகுதியில் தீயணைப்பு வாகனம் ஒன்றின் சக்கரத் தடங்கள் புல்தரையில் பதிந்துள்ளன.

இச்சம்பவம் புதன்கிழமை (ஏப்ரல் 9) நிகழ்ந்தது. தங்கள் பணிகள் தொடர்பில் பரிச்சயப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையின்போது தீயணைப்பு வாகனத்தின் முன் சக்கரங்கள் புல்தரையில் சிக்கிக்கொண்டன.

அந்தப் புல்தரைப் பகுதி, அத்தகைய வாகனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதை. புல்தரையில் சக்கரத் தடங்கள் பதிந்திருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

தெங்கா டிரைவில் உள்ள வீவக புளோக் 120Aக்கு அருகே இருக்கும் தீயணைப்பு வாகனங்களுக்கான பாதையில் சம்பந்தப்பட்ட தீயணைப்பு வாகனம் சுமார் 300 மீட்டர் சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஊடகத் துறையினரிடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தெங்கா டிரைவ் புளோக்121Cக்கு அருகே வாகனத்தின் முன் சக்கரங்கள் நிலத்துக்குள் சிக்கிக்கொண்டதாகப் படை கூறியது.

வாகனம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து தாங்கள் தீயணைப்பு வாகனச் சக்கரங்களை வெளியே எடுத்து அருகிலுள்ள சாலையில் விட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீராக்கி பழைய நிலைக்குக் கொண்டுவரவும் தீயணைப்பு வாகனப் பாதை 30 டன் எடைகொண்ட வாகனத்தைத் தாங்குவதை உறுதிசெய்யவும் அந்தக் குடியிருப்பு வட்டாரத்தின் நகர மன்றத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்