கேலாங் வட்டாரத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தீ மூண்டதைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
14 லோரோங் 26 கேலாங்கில் உள்ள கெக் ஹோங் ஆலயத்தில் தீ மூண்டதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.35 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்தது. சுமார் 5 மீட்டர் அகலமும் 5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு சிறிய புதர் பகுதியில் தீப்பிடித்தது.
நீர்க் குழாயைக் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது. பாதிக்கப்பட்ட ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது அப்பகுதிக்கு அருகே தமது மனைவியுடன் இருந்தாக பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காய் யின்சுவோ கூறினார். சம்பவ இடத்துக்கு அவர் சென்றபோது வயதான தம்பதியர் தீயை அணைக்க முயன்றதாக அவர் வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
“நல்ல வேளையாக அண்டை வீட்டார் ஒருவர் தீயணைப்பானை எடுத்து வந்தார். தீயணைப்பாளர்கள் வந்தடையும் வேளையில் என்னாலும் தீயை அணைக்க முடிந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

